தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (13-12-25) காலை டெல்லி சென்றுள்ளார். டெல்லி செல்வதற்கு முன்பாக கூட்டணியில் உள்ள எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்திருந்தார். இதனிடையே வரும் டிசம்பர் 15ஆம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரவுள்ள நிலையில், டெல்லி சென்று அமித் ஷாவை நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேச இருப்பது அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று மாலை 7 மணியளவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் பாஜக போட்டியிட விரும்பும் இடங்களின் பட்டியலை தர இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 இடங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் 4 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. இந்த முறை நயினார் நாகேந்திரன் கொடுக்கவுள்ள பட்டியலில் 50 இடங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதனடிப்படையில் வரும் 15 ஆம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா அதிமுகவிடம் தொகுதிப்பங்கீடு குறித்து பேச வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/13/a5819-2025-12-13-18-03-56.jpg)