'How many more days will it take? We must deliver without cheating' - Anbumani insists Photograph: (pmk)
'பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க இன்னும் எத்தனை நாள் ஆகும்? ஏமாற்றாமல் உடனடியாக வழங்க வேண்டும்' என பாமகவின் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இரு மாதங்களாகியும் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. லட்சக்கணக்கான உழவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விஷயத்தில் திமுக அரசு திட்டமிட்டு தாமதம் செய்வதும், ஏமாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது.
வடகிழக்கு பருவமழை நடப்பாண்டில் முன்கூட்டியே தொடங்கிய நிலையில் கடந்த அக்டோபர் 20, 21 ஆகிய தேதிகளில் பெய்த மழையில் காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவைப் பயிர்களும், நடவு செய்யப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்களும் சேதமடைந்தன. அதன்பின் நவம்பர் இறுதியில் டிட்வா புயல் காரணமாக பெய்த மழையில் சிக்கி காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன.
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 22-ஆம் தேதியும், நவம்பர் 30-ஆம் தேதியும் வெளியிட்ட அறிக்கைகளில் வலியுறுத்தியிருந்தேன். அக்டோபர் மாதத்தில் பெய்த மழையில் 2 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதாக நான் கூறியிருந்த நிலையில், அதே நாளில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்துறை அமைச்சர், 16 ஆயிரம் ஹெக்டேரில் ( 40 ஆயிரம் ஏக்கர்) பயிர்கள் பாதிக்கபட்டிருப்பதாகவும், மீதமுள்ள பயிர்களையும் கணக்கிட்டு இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால், அதன்பின் சுமார் 2 மாதங்களாகியும் இழப்பீடு வழங்கப்படாதது ஏன்?
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்கள் அடுத்த 10 நாள்களில் கணக்கிடப்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்பிறகு 15 நாள்களுக்கு மேலாகியும் இன்று வரை பாதிக்கப்பட்ட பயிர்கள் முழுமையாக கணக்கிடப்படவில்லை. நாகை மாவட்டத்தில் 50% அளவுக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 55% அளவுக்கும், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா 65% அளவுக்கும் மட்டுமே கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பயிர்களுக்கான பாதிப்பு எப்போது கணக்கிடப்படும்? எப்போது இழப்பீடு வழங்கப்படும்? என்பது மில்லியன் டாலர் வினாவாக தோன்றுகிறது.
பயிர் பாதிப்புகளை கணக்கிடுவதற்கு போதிய மனிதவளம் இல்லாதது தான் கணக்கெடுப்பு தாமதமாவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. உதவி வேளாண் அலுவலர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவரால் அதிகபட்சமாக 3 வருவாய் கிராமங்களில் உள்ள பயிர்களை மட்டுமே கணக்கெடுக்க முடியும். ஆனால், ஒவ்வொரு உதவி வேளாண் அலுவலருக்கும் 14 முதல் 16 வருவாய் கிராமங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் அவர்கள் பாதிப்பை கணக்கிடுவதற்கு இன்னும் பல நாட்கள் ஆகும். உழவர்கள் கடன் வாங்கி சாகுபடி செய்திருக்கும் நிலையில், இழப்பீடு வழங்குவதை தாமதித்துக் கொண்டே செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதுமட்டுமின்றி, காவிரி பாசன மாவட்டங்களில் ஒரு ஏக்கர் சம்பா, தாளடி பயிர்களுக்கான சாகுபடி செலவு ரூ.40,000 ஆகும் நிலையில், ஏக்கருக்கு ரூ.8000 மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 2014-ஆம் ஆண்டின் சாகுபடி செலவுகளை கணக்கிட்டு நிர்ணயிக்கப்பட்ட இந்தத் தொகையை 11 ஆண்டுகளுக்குப் பிறகும் உழவர்களுக்கு வழங்குவது பெரும் அநீதி.
கடன் வாங்கியும், கடுமையாக உழைத்தும் வளர்த்தெடுத்த பயிர்களை இழந்து விட்டு தவிக்கும் விவசாயிகளுக்கு இனியும் தாமதிக்காமல் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.8,000 என்ற இழப்பீடு போதாது என்பதால் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
Follow Us