தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் எடப்பாடி பழனிசாமி, "உங்கள் தொகுதியில் திமுக எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என்பதற்கு மக்களே மார்க் போடுங்கள் " என்கிற புதிய  பிரசாரத்தை  தொடங்கியிருக்கிறார்.

Advertisment

'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பயணத்தை தொடங்கியிருக்கும் இ.பி.எஸ், ஒரு நாளைக்கு மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்தித்து உரையாற்றுகிறார்.

அப்போது அவர், குறிப்பிட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு திமுக கொடுத்த வாக்குறுதிகள் பட்டியல் அடங்கிய நோட்டீஸைக் காட்டி மக்களிடம் கேள்வி எழுப்புகிறார்.

திமுக கொடுத்த ‘525 வாக்குறுதிகளில், 98% நிறைவேற்றிவிட்டதாக திமுகவினர் சொல்கின்றனர். இப்போது உங்கள் தொகுதிக்கு திமுகவினர் அறிவித்த வாக்குறுதிகளைப் படிக்கிறேன். இவற்றை நிறைவேற்றி விட்டார்களா? என்று நீங்களே சொல்லுங்கள், அதன் பிறகு திமுகவுக்கு நீங்களே மார்க் போடுங்கள்…என்று அழுத்தமாகச் சொல்வதை மக்கள் கூர்ந்து கவனிக்கின்றனர்.

Advertisment

அந்த தொகுதிகளில் செய்து கொடுப்பதாக திமுக கொடுத்த வாக்குறுதிகளில் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என்று ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டும் எடப்பாடி பழனிசாமி,  "இந்த ஆட்சிக்கு நான் பூஜ்ஜியம் மதிப்பெண் தருகிறேன். நீங்களும் மதிப்பெண் போடுங்கள். அதிமுக ஆட்சியையும் திமுக ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்த்து ஓட்டு போடுங்கள்" என்று கேட்டுக்கொள்கிறார்.

இபிஎஸ் படிப்பதைக் கேட்கும் மக்கள், "இவற்றையெல்லாம் திமுக நிறைவேற்றவே இல்லை’ என்று உரத்த குரலில் சொல்கின்றனர். வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என மக்கள் ஒருமித்தக் குரலில் கூறுவதை வீடியோவில் பதிவு செய்து கொள்கிறார்கள் அதிமுகவின் ஐ.டி.விங்க் உறுப்பினர்கள். இதனைத் தொகுத்து தேர்தல் களத்தில் எதிரொலிக்கச் செய்ய திட்டமிட்டுள்ளது அதிமுக.