திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, கடந்த சில ஆண்டுகளாக கோவில் அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், உச்ச – உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசின் நிர்வாகத்துறை செயலாளர்கள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு  சிறப்பு பாஸ் வழங்கப்படுகிறது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் சென்னை உயர்நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டுள்ளன.

Advertisment

அறநிலையத்துறை பணியாளர்கள், ஊழியர்கள், தற்காலிக பணியாளர்களுக்கு கோவில் இணை ஆணையரும், மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், பத்திரிக்கையாளர்களுக்கு தீபத்துக்காக பணி சார்ந்த அடையாள அட்டை மாவட்ட ஆட்சியரின் கையெழுத்திட்டு தீபத்துக்காக வழங்கப்படுகிறது. அதேபோல் பாதுகாப்பு பணிக்காக வரும் காவலர்கள், அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனியாக டூட்டி பாஸ் வழங்குகிறார். இதில் கட்டளைதாரர் மற்றும் உபயதாரர் பாஸ் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பாஸ் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவைச் சேர்ந்த பக்தர்களுக்கு 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்கப்பட்டு வருகிறது. அதேபோல் போலி பாஸ்கள் நடமாட்டமும் அதிகரித்தபடியே இருந்தன.

Advertisment

இதுக்குறித்து கடந்த சில ஆண்டுகளாக நக்கீரன் தொடர்ந்து செய்தி வெளியிட்டு அம்பலப்படுத்தி வந்தன. இதனால் போலி பாஸ்களை தடுக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக எலக்ரிக்சிப் பொருத்தப்பட்ட பாஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் போலி பாஸ்கள் தடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கோவில் பணியாளர்கள், சுவாமி தூக்குபவர்கள், மின் அலங்கார பணியாளர்கள் என்கிற பெயரில் பாஸ்கள் பிரிண்ட் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் சொல்லப்பட்டது. இந்தாண்டு பாஸ் பிரிண்ட் செய்து தந்ததாக கோவில் ஊழியர்களான சிலம்பரசன், கோபி உட்பட மூவரை காவல்துறை கைது செய்துள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த இரண்டு ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் கோவில் சார்பில் தரப்பட்ட தீபம் பாஸ்களை அணிந்துக்கொண்டு கோவிலுக்குள் வந்து தீப தரிசனம் செய்தனர். தற்போது அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு என தனிப்பட்ட முறையில் தரப்பட்ட பாஸ், எப்படி ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு கிடைத்து, அவர்கள் எப்படி அணிந்து வந்தார்கள்? அவர்களை காவல்துறை எப்படி உள்ளே அனுமதித்தது? உள்ளுர் மக்களிடம், திருவிழா நடத்தும் மாவட்ட அரசுத்துறை அதிகாரிகளிடம் நகருக்குள் வருவதற்கும், கோவிலுக்குள் செல்வதற்கும், கார் பாஸ் இருக்கா? நீ எந்த தெரு? ஆதார் அட்டை இருக்கா?, டூட்டி பாஸ் இருக்கா?, அந்த பாஸ் இருக்கா, இந்த பாஸ் இருக்கா? எனக்கேட்கும் காவல்துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினரே இல்லாத இருவர் கோவிலுக்குள் அந்த பாஸ் அணிந்து வந்தவர்களை சகல மரியாதையுடன் எப்படி உள்ளே அழைத்து வந்து எல்லா இடங்களுக்கும் எப்படி அனுமதித்தார்கள்? என்கிற கேள்வி அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது.

Advertisment

இவர்கள் மட்டும்தானா இன்னும் யார், யாரெல்லாம் எம்.எல்.ஏக்களுக்கு, எம்.பிகளுக்கு தந்த பாஸ்களை பயன்படுத்தி உள்ளே வந்தார்கள் என்கிற கேள்வி பலதரப்பிலும் எழுந்துள்ளது. இதனை சம்மந்தப்பட்ட எம்.எல்.ஏக்களே, அந்த பாஸ்களை அவர்களுக்கு வழங்கினார்களா?அல்லது திருடப்பட்டதா? அல்லது போலியா என்கிற கேள்வி பல கேள்விகள் இதில் எழுந்துள்ளன. காவல்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர் பாஸை தவறாக பயன்படுத்தியவர்களிடம் விசாரணை நடத்தவேண்டும். அது எந்த சட்டமன்ற உறுப்பினருக்கு தந்த பாஸ்? அதை ஏன் அவர்களுக்கு தந்தார்? என விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. நடவடிக்கை எடுப்பார்களா?