How dare you touch my mobile? says by BJP MLA reprimands doctor!
உத்தரப் பிரதேசத்தில் மாநில அரசு ஏற்பாடு செய்த கண்காட்சியின் போது சுகாதார அதிகாரி ஒருவரிடம் பா.ஜ.க எம்.எல்.ஏ காட்டமாக பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் மஹாராஜ்கஞ்ச் மாவட்டம் நிச்லாலில் உள்ள சமூக சுகாதார மையத்தில் அரசு சார்பில், ‘ஆரோக்கியமான பெண்கள், அதிகாரம் பெற்ற குடும்பம்’ என்ற பெயரில் கண்காணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவை தொடங்கி வைக்க பா.ஜ.க எம்.எல்.ஏவான பிரேம் சாகர் படேலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை எம்.எல்.ஏ பிரேம் சாகர் கண்காட்சியை தொடங்கி வைக்க அந்த இடத்திற்குச் சென்றார்.
அப்போது, சமூக சுகாதார ஆர்வலர் மற்றும் துணை செவிலியர் பணியாளர்கள் உள்ளிட்டோர் மேடையின் முன் நாற்காலியில் அமர்ந்திருந்தனர். இதனை கண்ட பிரேம் சாகர் அதிருப்தி தெரிவித்தார். இதில் கோபமடைந்த பிரேம் சாகர், உடனடியாக மாவட்ட நீதிபதியிடம் வீடியோ அழைப்பு செய்து ஏற்பாடுகள் குறித்து புகார் அளித்தார். ஊழியர்கள் அலட்சியமாக இருப்பதாகவும், பொதுமக்களுக்கான இருக்கைகளை சுகாதாரப் பணியாளர்கள் ஏன் ஆக்கிரமித்துள்ளனர் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் அவர், இதுபோன்ற கண்காட்சிகளின் நோக்கம் ஏழைகளுக்கு சேவை செய்வதே என்று மாவட்ட நீதிபதியிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, சமூக சுகாதார மையத்தின் கண்காணிப்பாளர் மருத்துவர் உமேஷ் சந்திர சிங், தனது நிகழ்ச்சிகளை விளக்குவதற்காக எம்.எல்.ஏ பிரேம் சாகர் கையில் இருந்த தொலைப்பேசியை பறிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த எம்.எல்.ஏ பிரேம் சாகர், “நான் ஒரு அழைப்பில் இருக்கும்போது என் மொபைலை எப்படித் தொட்டீர்கள்? உங்கள் கைகளைப் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் ஒரு எம்.எல்.ஏவை கையாள்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். உங்களை நீங்களே கேலி செய்கிறீர்கள்” என்று மருத்துவரை கடுமையாகக் கண்டித்தார்.
மேலும் அவர் ஊழியர்களை நோக்கி, “இவர்கள் அனைவரும் ஊழியர்கள். கண்காட்சியில் கடமைகளில் இருக்கும்போது ஏன் இங்கே அமர்ந்திருக்கிறார்கள்? மித்தோராவில் உள்ள எங்கள் மக்கள் மின்சாரம் இல்லாமல் வியர்வையில் இருக்கிறார்கள். இங்கே, ஊழியர்கள் விருந்தினர்களைப் போல மின்விசிறிகளின் கீழ் அமர்ந்திருக்கிறார்கள்” என்று காட்டமாகப் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி பரவியது. வீடியோ வைரலானதை அடுத்து தலைமை மருத்துவ அதிகாரி, மருத்துவர் உமேஷ் சந்திர சிங்கை பதவியில் இருந்து நீக்க உத்தரவிட்டார்.
இது குறித்து தலைமை மருத்துவ அதிகாரி ஸ்ரீகாந்த் சுக்லா தெரிவித்துள்ளதாவது, ‘சமூக சுகாதார மையத்தின் கண்காணிப்பாளர் அலட்சியம் காரணமாக அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பலமுறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், அவர் தனது பொறுப்புகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்றைய சம்பவம் மற்றும் எம்.எல்.ஏ.வின் கடுமையான ஆட்சேபனைகளைத் தொடர்ந்து, அவர் நீக்கப்பட்டுள்ளார்’ எனத் தெரிவித்தார்.