சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவிகளை குறி வைத்தே அதிகமான குற்றங்கள் நடக்கிறது. இந்த இணைய வழி குற்றவாளிகளிடம் சிக்கி ஏராளமான மாணவிகள் தங்கள் லட்சியம், வாழ்க்கையை இழந்து வருகின்றனர். இதை தடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், கல்விக்காக இணைய வழியை தேடும் மாணவிகள் இணைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோரிடம் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும். இணையத்தை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்று மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு "அகல் விளக்கு" என்ற திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த அகல் விளக்கு திட்டம் என்பது மாணவிகள் இணையம் மூலம் ஏற்படும் உடல், மனம், சமூக ரீதியான பிரச்சனை, பாலியல் போன்ற பிரச்சனைகளில் இருந்தும், இணைய வழி குற்றங்களில் இருந்தும் தங்களை தற்காத்துக் கொண்டு இணையத்தை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது குறித்து ஆசிரியைகள், மாணவிகள் உள்ளடக்கி ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு குழு அமைத்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டமே அகல் விளக்கு. இந்த திட்டம் தமிழ்நாட்டில் முதன்முதலாக ஒரு அரசுப் பள்ளியில் இருந்தே தொங்கப்பட உள்ளது.
அதாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 28 மாணவிகளை மருத்துவர்களாகவும் மேலும் பல மாணவிகளை பல்வேறு துறைகளிலும் சாதிக்க வைத்த கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை மாலை 2 மணிக்கு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைக்கிறார். ஒரு திட்டத்தை ஒரு பள்ளியில் தொடங்கி வைப்பது இதுவே முதல்முறை.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/07/a4799-2025-08-07-23-42-02.jpg)
மேலும்,இந்த விழாவில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட ஆட்சியர் அருணா, மாவட்ட முதன்மைக் கல்வி சண்முகம் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்வில் கீரமங்கலம், கொத்தமங்கலம், மேற்பனைக்காடு, எல்.என்.புரம், மாங்காடு, வடகாடு, நெடுவாசல் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சுமார் 1,300 பேர் கலந்து கொள்கின்றனர். அகல் விளக்கு திட்டம் தொடங்கி வைத்து முதல்கட்டமாக 32 பக்க அளவில் தயாரிக்கப்பட்டுள்ள அகல் விளக்கு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு கையேடு அனைத்து மாணவிகளுக்கும் வழங்கப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9 முதல் 12 ம் வகுப்பு பயிலும் அனைத்து பள்ளி மாணவிகளுக்கும் விழிப்புணர்வு கையேடு வழங்கி விழிப்புணர்வு குழு அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் இணைய வழி குற்றங்களில் இருந்து மாணவிகள் தங்களை தற்காத்துக் கொள்ள முடியும் மேலும் இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்த முடியும் என்கின்றனர்.
மேலும், இதே நாளில் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 212 பள்ளி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் STEM கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைக்க உள்ளார்.