house broken into, jewelry and money stolen Photograph: (police)
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் முதியவர் தனியாக தங்கியிருந்த வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்ததோடு முதியவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஸ்ரீராம்புரத்தில் முதியவரான சண்முகம் (80) தனியாக வசித்து வந்த நிலையில் நள்ளிரவில் வீட்டைச் சுற்றிவளைத்த மர்ம நபர்கள் சிலர் கதவைத் திறக்கும் படி கற்களையும் பாட்டில்களையும் வீட்டின் மீது வீசியுள்ளனர். ஆனால் பயத்தில் உள்ளே இருந்த சண்முகம் கதவைத் திறக்காமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று சண்முகத்தை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதில் சண்முகத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. பின்னர் உள்ளே புகுந்த அந்த 6 பேர் கொண்ட கும்பல் 2000 ரூபாய் ரொக்கத்தையும் 5 சவரன் நகையும் திருடிச் சென்றனர். காலையில் அந்த பகுதியில் நடந்து சென்றவர்கள் சண்முகத்தின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் சென்றனர். அப்பொழுது ரத்த காயத்தில் கிடந்த சண்முகத்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரை தாக்கி பணம், நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
Follow Us