திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி காவல் நிலையம் அருகே பெப்சி என்ற தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்திற்கு கடந்த 16-ஆம் தேதி மாலை 4 மணியளவில், அதே பகுதியைச் சேர்ந்த கெளதம் என்பவர் சாப்பிட வந்துள்ளார். அவர் ஃப்ரைடு ரைஸ் ஆர்டர் செய்து காத்திருந்ததாகவும், அவருக்குப் பின்னால் வந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்ட நிலையில் கெளதமுக்கு வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisment

இதனால் கோபமடைந்த கெளதம் உணவகத்தில் இருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகராறு மேலும் அதிகரிக்க, கஞ்சா போதையில் இருந்த கெளதம் தனது நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டு உடனடியாக அங்கு வருமாறு அழைத்தார். ஆறு பேர் கொண்ட கும்பல் வந்ததும், திடீரென ஆக்ரோஷமாக மாறிய கெளதம் கணக்காளர் ஜாகீர் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்தினார். அதோடு, கெளதமும் அவரது நண்பர்களும் சேர்ந்து உணவகத்தில் இருந்த கண்ணாடிப் பொருட்கள், நாற்காலிகள் போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தினர்.

Advertisment

வெறும் 5 நிமிடங்களில் கடையையே சூறையாடிய கும்பல், சமையல் மாஸ்டர், ஊழியர்கள் மற்றும் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இதில் ஒருவர் நாற்காலியைத் தூக்கி வீசிய போது ஒரு குழந்தை நூலிழையில் தப்பியது. இதையடுத்து, சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் தாக்குதல் நடத்திய கும்பலைப் பிடிக்க முயன்றனர். அனைவரும் தப்பி ஓடிய நிலையில் கெளதமை மட்டும் கையும் களவுமாகப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த வீரபாண்டி காவல் நிலைய போலீசார் கெளதமைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதனிடையே, இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த கணக்காளர் ஜாகீர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரிடம் நடந்த விஷயத்தைக் கேட்டறிந்த போலீசார் உணவகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் தொடர் விசாரணையில் கெளதம் மீது 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, உணவகத்தைச் சேதப்படுத்தியது, ஊழியர்களைத் தாக்கியது, உயிருக்கு ஆபத்து விளைவித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கெளதமைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய 6 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், இந்தத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதற வைக்கின்றன.

Advertisment