தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கவின். இவர் சென்னையில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இத்தகைய சூழலில் தான் இவர் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். அச்சமயத்தில் தன்னுடைய தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை பாளையங்கோட்டை கே.டி.சி நகர்ப் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு கடந்த 27ஆம் தேதி (27.072025) அழைத்து வந்தார். அதன்படி மருத்துவமனை வாசலில் காத்திருந்த போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் கவினைச் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவினின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் என்ற இளைஞர் தான் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது என்பது தெரியவந்தது. இதையடுத்து சுர்ஜித்தைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதில் உயிரிழந்த கவினும், சுஜித்தின் சகோதரியும் பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கவின், தனது சகோதரியிடம் பழகுவது சுர்ஜித்துக்கும், காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றி வரும் சுஜித்தின் தாய் மற்றும் தந்தை ஆகியோருக்கும் பிடிக்காமல் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக சுஜித், கவினைக் கொலை செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கவின் ஆணவக் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். அதே சமயம் கவின் கொலை வழக்கு தொடர்பாக தலைமைறைவாக இருந்த சுர்ஜித்தின் தந்தையும், காவல் ஆய்வாளருமான சரவணனை போலீசார் கைது செய்யப்பட்டார்.
இத்தகைய சூழலில் தான் கவினின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் 4வது நாளாக இன்றும் (31.07.2025) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அமைச்சர்கள் கே.என். நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராசி உள்ளிட்ட பலரும் கவினின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவித்தனர். அதோடு கவின் குமாரின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கவின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து சென்றது குறிப்பிடத்தக்கது.