தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த இளைஞர் கவின். இவர் சென்னையில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இத்தகைய சூழலில் தான் இவர் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். அச்சமயத்தில் தன்னுடைய தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டை கே.டி.சி நகர்ப் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்குக் கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி (27.072025) அழைத்து வந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் சுர்ஜீத் என்பவர் கவினைச் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். 

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், உயிரிழந்த கவினும், சுஜித்தின் சகோதரியும் பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கவின், தனது சகோதரியிடம் பழகுவது சுர்ஜித்துக்கும், காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றி வரும் சுஜித்தின் தாய் மற்றும் தந்தை ஆகியோருக்கும் பிடிக்காமல் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக சுஜித், கவினைக் கொலை செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கவின் ஆணவக் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். 

அதே சமயம் கவின் கொலை வழக்கு தொடர்பாகத் தலைமறைவாக இருந்த சுர்ஜித்தின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணனை போலீசாரால் கைது செய்யப்பட்டார். மற்றொருபுறம் கவினின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்த கவினின் உடல் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அச்சமயத்தில் மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின்  தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கவினின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

அப்போது கவினின் குடும்பத்தினர் அவர்களிடம், “எங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். அந்த வகையில்  24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த கோரிக்கையின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் கவினின் தந்தைக்கு ஒரு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 24 மணி நேரமும் கவினின் தந்தையோடு போலீசார் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.