சென்னை தியாகராய நகரின் பரபரப்பான தெருக்களில், வழக்கம்போல் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார் பத்மா. அவரது வயது 48. கிருஷ்ணம்பேட்டையில் வாடகை வீட்டில் வசிக்கும் அவரது குடும்பம் மிகவும் சாதாரணமானது. ஆனால் அவரது மனசோ, தங்கத்தை விட மின்னும் நேர்மையால் நிறைந்தது!
ஜனவரி 11 ஆம் தேதி, முத்தம்மன் கோயில் தெருவில் தூய்மைப் பணி செய்தபோது, ஒரு தள்ளுவண்டி மேல் கிடந்த பிளாஸ்டிக் பையைப் பார்த்தார் பத்மா. முதலில் குப்பை என்று நினைத்த அவர் அதைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். உள்ளே 45 சவரன் தங்க நகைகள்! கழுத்துப்பட்டை, கம்மல்கள், வளையல்கள் இருந்தன. அதன் தற்போதைய மதிப்பு சுமார் 45 லட்ச ரூபாய்க்கும் மேலிருக்கும்.
அந்த நகையை பத்மா எடுத்துக் கொண்டால் அவரது வாழ்க்கையே மாறியிருக்கும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. நகையை இழந்த குடும்பத்தின் துயரம், அவர்களது கண்ணீர் என அனைத்தையும் நினைத்துப் பார்த்து, உடனே அந்தப் பையை எடுத்துக்கொண்டு எந்தத் தயக்கமும் இல்லாமல் பாண்டிபஜார் காவல் நிலையத்துக்கு ஓடினார். "இந்தப் பையில் நிறைய தங்கம் இருக்கிறது... யாருடையதோ தெரியவில்லை. நீங்கள் விசாரித்து அவர்களுக்குத் திருப்பிக் கொடுங்கள்" என்று நேர்மையாக ஒப்படைத்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது, அந்த நகை பழைய நகைகளை வாங்கி விற்கும் தங்க வியாபாரி ரமேஷ் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது தவறுதலாக வண்டிமேல் வைத்துவிட்டுச் சென்றதாக ரமேஷ் கூறினார். நகை காணாமல் போனதாக ஏற்கனவே புகாரும் கொடுத்திருந்தது தெரியவந்தது. பின்னர் நன்கு விசாரிக்கப்பட்டு, பத்மாவின் நேர்மை காரணமாக நகைகள் உரியவரிடம் சேர்க்கப்பட்டன.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/16/662-2026-01-16-17-35-20.jpg)
இந்தச் சம்பவம் வெளியான கணத்திலிருந்து தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தன. மேலும் இந்தத் தகவல் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் காதுகளுக்கு எட்டியது. உடனடியாக பத்மாவை நேரில் அழைத்து பாராட்டியதோடு, ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் சால்வை அணிவித்து கௌரவித்தார்.
இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், பத்மாவின் கணவர் சுப்ரமணியும் கொரோனா காலத்தில் மெரினா கடற்கரையில் கிடந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து போலீசிடம் ஒப்படைத்தவர். இப்படி தீவிர வறுமையிலும் நேர்மையாக நடந்து கொண்ட கணவன்-மனைவியர், தங்களது இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து பேசிய பத்மா,"நகை கண்டவுடன், அதை இழந்த குடும்பத்தினர் எவ்வளவு துன்பப்படுவார்கள் என்று நினைத்தேன். அதனால் உடனே போலீசிடம் கொடுத்தேன். நகை உரியவரிடம் சேர்ந்ததில் மகிழ்ச்சி" என்றார்.
இன்றைய உலகில் இந்தச் சம்பவம் நேர்மை இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. நேர்மை என்பது பெரிய பதவியோ, பணமோ அல்ல... அது மனதின் தூய்மை!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/16/661-2026-01-16-17-34-54.jpg)