ஆந்திர மாநில காவல்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் ஸ்ரீ ராம். தற்போது இவர் பொதட்டூர்  காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் இந்த காவல் நிலையத்திற்கு 40 நாட்களுக்கு முன்பு, அதாவது கடந்த டிசம்பர் மாதம் 28 ம் நாள் ஆய்வாளராகப் பொறுப்பேற்றார், இந்நிலையில் தற்போது இவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது காவல்துறை மற்றும் பொதுமக்கள் உட்பட அனைவரிடத்திலும் பேசு பொருளாக மாறியுள்ளது.

Advertisment

இவர் காவல்துறையில் பணியில் சேர்ந்த காலம் முதல் தொட்டே எந்த அரசியல் கட்சியினருக்கும் அடிபணியாமல் நேர்மையாக பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் குற்றத்தில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார். மேலும், குற்றத்தில் ஈடுபடும் நபர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்து இனிமேல் குற்றத்தில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார். நிலுவையில் உள்ள வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகள், அரசியல்வாதிகள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை அழைத்து நீதிமன்றத்தில் ஆஜராகும் படி அறிவுறுத்தியுள்ளார். அதுபோகச் சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் போதைப் பொருட்களை விற்பவர்களையும் கண்டித்துள்ளார்.

Advertisment

இதன் காரணமாக, பொது மக்களிடம் இவர் மீதான மரியாதையை மட்டுமல்லாமல் காவல்துறையின் மீதான மரியாதையும் அதிகரித்துள்ளது. இவ்வாறு இவர் நேர்மையாக இருப்பதைப் பொறுக்க முடியாத, சில அரசியல்வாதிகளின் தொடர் அழுத்தத்தின் காரணமாக இவர் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது அப்பகுதியில் உள்ள பொது மக்களிடமும், காவல்துறையினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், "நேர்மையாக பணியாற்றுவதால் அவருக்குத் தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கப்படுகிறது. இவர் பணியில் சேர்ந்த 18 ஆண்டுகளில் இதுவரை 30 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்"என காவல்துறை சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.