நெல்லையில் நடந்த பட்டப்பகல் ஆணவக்கொலை திகிலையும் பீதியையும் கிளப்பியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தின் ஆறுமுகமங்கலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் சந்திரசேகர். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. தம்பதியரின் மகன் கவின் (எ) செல்வகணேஷ். இவர்கள் தூத்துக்குடி பிரைட் நகரில் குடியிருந்து வருகின்றனர். சந்திரசேகர் விவசாயம் பார்த்து வருகிறார். மனைவி தமிழ்ச்செல்வி ஆறுமுக மங்கலத்தில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர்களின் மகன் கவின் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் மாதம் ரூபாய் 2 லட்சம் சம்பளத்தில் வேலை பார்த்து வருபவராம். கவின் முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த போது அதே வகுப்பில் பாளை. கே.டி.சி. நகரைச் சேர்ந்த சரவணன்- கிருஷ்ணகுமாரி தம்பதியரின் மகளும் அவருடன் பயின்று வந்திருக்கிறார். சரவணன் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணகுமாரி இருவரும் மணிமுத்தாறு ஆயுதப்படையின் தமிழ்நாடு சிறப்பு காவல் பட்டாலியனில் எஸ்.ஐ.யாகப் பணிபுரிந்து வருபவர்கள். சரவணன் இராஜபாளையம் பட்டாலியனிலும், கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு பட்டாலியனிலும் பணியில் இருப்பவர்கள். இவர்களின் மகன் சுர்ஜித். சரவணன் கிருஷ்ணகுமாரி தம்பதியர் தூத்துக்குடி மாவட்டத்தின் கயத்தாரை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

a4584
Homicide: IT employee brutally Photograph: (nellai)
Advertisment

கவினும் அந்தப் பெண்ணும் பிளஸ் 2 வரை ஒன்றாகவே படித்து வந்தவர்கள். அதனால் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு இருவரும் சகஜமாகப் பேசி வந்திருக்கிறார்கள். இந்த விவரம் அந்தப் பெண்ணின் உடன் பிறந்த தம்பியான சுர்ஜித்திற்கும் தெரிய வந்திருக்கிறது. பிளஸ் 2 விற்கு பின்பு அந்தப் பெண் சித்தா பி.எஸ்.எம்.எஸ். பயின்று மருத்துவராகி தற்போது பாளையில் உள்ள சித்தா ஆயுர்வேதிக் மையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருபவர். கவினோ பிளஸ் 2 விற்கு பின்பு தொழில்நுட்பம் பயின்று சென்னையிலுள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

பள்ளி படிப்பு முடிந்தும் தற்போதுவரை இருவரும் வெவ்வேறு துறையில் பணியில் இருந்தாலும் இவர்களின் பழக்கம் தொடர்ந்து நீடித்து வந்திருக்கிறது என்றாலும் இருவரும் வெவ்வேறு சமூகம் சார்ந்தவர்கள். இவர்களின் பழக்கமும் தன் சகோதரியிடம் கவின் அடிக்கடி பேசி வந்ததும் சுர்ஜித்திற்கு பிடிக்கவில்லை என்பதால் பலமுறை அவர் கவினை கண்டித்தும் வந்திருக்கிறார். இந்தக் கண்டிப்பை சற்றும் கண்டுகொள்ளாத கவின் தொடர்ந்து அந்தப் பெண்ணுடன் அடிக்கடி பேசியும் பழகியும் வந்திருக்கிறார். அதே சமயம் அந்தப் பெண்ணும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்திருக்கிறார். விளைவு சென்னையில் கவின் வேலை பார்த்தாலும் அடிக்கடி ஊருக்கு வருபவர் அந்த பெண்ணின் மருத்துவமனைக்குச் சென்று அவருடன் வழக்கம்போல் பேசியும் பழகியும் வந்திருக்கிறார்.

Advertisment

இதனை பலமுறை நோட்டம் விட்ட அந்தப் பெண்ணின் சகோதரன் சுர்ஜித் தொடர்ந்து கவினை கண்டித்தும் அவர் அதனை சட்டைசெய்யாமல் போகவே ஆத்திரத்தின் உச்சிக்குப் போயிருக்கிறார். தவிர இந்தச் சம்பவங்கள் அனைத்தும் சுர்ஜித்தின் தாய் தந்தையான சரவணன் கிருஷ்ணகுமாரி தம்பதியருக்கும் தெரியவந்திருக்கிறது. அவர்களுக்கும் இதில் உடன்பாடு இல்லையென்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் வழக்கம்போல் விடுப்பில் ஊருக்கு வந்த கவின் உடல்நலம் சரி இல்லாத தன் தாத்தா முத்துமாலையை சிகிச்சைக்காக பாளையில் உள்ள அதே சித்த மருத்துவமனைக்கு ஜூலை 27 மதியம் 2மணி வாக்கில் அழைத்து வந்தவர் அங்கு அவரை சேர்த்துவிட்டு மருத்துவமனையின் வெளிப்புறம் நின்று கொண்டிருந்திருக்கிறார். இதையறிந்து அங்கு வந்த சுர்ஜித் அவரிடம் பேச்சு கொடுத்தவர் தன் தாயும் தந்தையும் அழைப்பதாகக் கூறி கவினை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றிருக்கிறாராம். கே.டி.சி. நகரில் மூகாம்பிகை நகரின் குறுகலான தெருவிற்கு வந்தபோது எதிர்பாராத விதமாக கவினை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியிருக்கிறாராம்.

பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை பற்றிய தகவலை அறிந்த பாளை இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் வந்து கவினின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதுகுறித்து விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் காசிப் பாண்டியன், அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்த போது, கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் பாளை கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் சுர்ஜித் என்பது தெரியவந்திருக்கிறது. தீவிரமாகச் செயல்பட்ட போலீசார் சில மணி நேரத்தில் சுர்ஜித்தை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.

a4584
Homicide: IT employee brutally Photograph: (nellai)

மருத்துவமனையிலிருந்த கவினை சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பாளை கே.டி.சி. மூகாம்பிகை நகரின் குறுகலான தெருவிற்கு அழைத்து வந்து இந்த படுகொலை நடத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டதற்கு வாய்ப்பில்லை. மேலும் கவினின் கவனத்தை திசை திருப்ப அவரின் மீது திடீரென்று மிளகாய் பொடி தூவிவிட்டு இந்தக் கொலையை நடத்தியிருக்கிறார்களாம். இதில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கலாம். அவர்கள் கூலிப்படையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற பேச்சும் பாளை பகுதியில் பரவலாகவே பேசப்பட்டு வருகிறது.

இதனிடையே கவினின் பெற்றோர்களும் அவரது உறவினர்களும் இந்தக் கொலை சம்பவத்தில் சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணனுக்கும் அவரது மனைவி கிருஷ்ணகுமாரிக்கும் தொடர்பிருக்கிறது. அவர்களையும் கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்கப்போவதில்லை என்று ஆறுமுக மங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

வா பேசிக்கொள்ளலாம் என்றும் தாயும் தந்தையும் அழைப்பதாகக் கூறித்தான் என் மகனை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதனால் சுர்ஜித்தின் பெற்றோர்களுக்கும் இதில் தொடர்பிருக்கிறது. என்று தன் புகாரில் தெரிவித்திருக்கிறார் கவினின் தந்தையான சந்திரசேகர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சுர்ஜித் போலீசாரின் விசாரணையின்போது கவினும் என் சகோதரியும் பள்ளிப் பருவத்திலிருந்தே ஒன்றாகப் பழகி வந்திருக்கிறார்கள். அவர் வேறு சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் அவர் எனது அக்காளுடன் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை. எனது சகோதரி பாளையில் உள்ள தனியார் சித்த மருத்துவமனை மையத்தில் வேலை பார்ப்பதை அறிந்த கவின், அங்கு யாரையாவது சிகிச்சைக்காக அடிக்கடி அழைத்துச் சென்று என் சகோதரியிடம் பழகி வந்திருக்கிறார். அதை நான் பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. இதற்கிடையே நேற்றும் அதேபோல் மருத்துவமனைக்கு அவர் செல்வதை அறிந்துகொண்ட நான், அவரைத் தனியாக அழைத்து எச்சரிக்கை செய்தேன். ஆனால் அவர் பேசுவதை நிறுத்த முடியாது என்று கூறியதால் ஆத்திரத்தில் அவரை வெட்டிக் கொலை செய்தேன் என்று வாக்குமூலமாகவே கூறியிருக்கிறார் என்கிற போலீஸ் வட்டாரத்தினர் சுர்ஜித்தின் தாய் தந்தையாரின் மீதும் எஃ.ஐ.ஆர். பதிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.