விஜய்யின் பாதுகாப்பில் குறைபாடா? என்று பாதுகாப்பு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. இந்த துயர சம்பவம் தொடர்பாக மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், பிரச்சாரத்திற்கு கொடி கம்பம், பிளக்ஸ் பேனர்கள் ஏற்பாடு செய்த கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பாதுகாப்பில் ஏதாவது குறைபாடு உள்ளதா? என்று உள்துறை அமைச்சகம் ஒய்.பிரிவு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய்க்கு ஏற்கெனவே ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிற சூழ்நிலையில், தினமும் 8 முதல் 11 கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படைய சேர்ந்த கமாண்டோ படையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், அவர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் பிரச்சார பயணம், மாநாடு போன்ற நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏதாவது உள்ளதா என்று உள்துறை அமைச்சகம் ஒய் பிரிவு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கேள்விக்கு மத்திய ரிசர்வ் படையினர் பதிலளிக்கும் பொருட்டு, விஜய்க்கு பாதுகாவலருடைய எண்ணிக்கை உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.