சமீபத்தில் பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து பாட்னாவில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில், பீகார் முதல்வராக நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisment

அதன்படி, பீகார் முதல்வராக நேற்று நிதிஷ் குமார் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து பா.ஜ.க தலைவர்களான சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ​​ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களைத் தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளம் தலைவர்களும், கூட்டணித் தலைவர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

Advertisment

நிதிஷ் குமார் தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற நிலையில், இன்று அவர்களுக்கு இலாக்கக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், பா.ஜ.க தலைவர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, முதல்வர் நிதிஷ் குமார் வகித்த உள்துறை அமைச்சர் பதவி, துணை முதல்வரான சாம்ராட் சவுத்ரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சாம்ராட் சவுதிரிக்கு உள்துறை மட்டுமல்லாது, நிதித்துறை மற்றும் வர்த்தக வரிகள் துறை ஆகியவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்றொரு துணை முதல்வரான விஜய் குமார் சின்ஹாவுக்கு வருவாய் மற்றும் கனிகவளத்துறை ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது தவிர, பா.ஜ.கவைச் சேர்ந்த திலீப் ஜெய்ஸ்வாலுக்கு தொழில்துறையும், பா.ஜ.கவைச் சேர்ந்த மங்கல் பாண்டேவுக்கு சுகாதாரம் மற்றும் சட்டத்துறையும், மற்றொரு பா.ஜ.க தலைவரான நிதின் நவீனுக்கு சாலைகள் மற்றும் ஊரக வளர்ச்சி துறையும், பா.ஜ.கவின் ராம்கிருபால் யாதவுக்கு விவசாயத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்படியாக பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு முக்கியமான இலாக்கக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Advertisment

உள்துறையின் கீழ், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதால் முதலமைச்சர்களே இந்த துறையை தங்கள் கைவசம் வைத்திருப்பார்கள். அதன்படி, கடந்த முறை முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமார், உள்துறையை தன் கைவசத்தில் வைத்திருந்தார். ஆனால், இன்று அறிவிக்கப்பட்டிருக்கும் பட்டியலில் உள்துறையை பா.ஜ.க தலைவரான துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நிதிஷ் குமார் மாநில முதலமைச்சர் என்றாலும் நிர்வாகத்தின் கட்டுப்பாடு, சட்டம் ஒழுங்கு ஆகியவை பா.ஜ.கவைச் சேர்ந்த ஒருவரிடம் கைவசம் தான் உள்ளது.