தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது ஜூன்19 ஆம் தேதி கடையை மூடாததால் செல்போன் கடை வைத்திருந்த தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தனர். அந்த நேரத்தில் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பல்வேறு அரசியல் கட்சிகளும் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டங்களை நடத்தி இருந்தன.
இந்த சம்பவத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட ஒன்பது காவலர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையானது நடைபெற்று வருகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/28/a4505-2025-07-28-18-15-29.jpg)
இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக மாறி 'நானே உண்மையைச் சொல்கிறேன்' என நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்கில் புதிய பரபரப்பையும், திருப்பத்தையும் கொடுத்திருந்தது.
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவர் ஆவது குறித்த மனுவுக்கு சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த (24/07/2025) அன்று சிபிஐ தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர் அப்ரூவர் ஆவதற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸின் ரத்த உறவுகளிடம் இதுதொடர்பாக கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே ஸ்ரீதர் அப்ரூவர் ஆவதை ஏற்பதா அல்லது இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்த நீதிமன்றம், வழக்கை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (28/07/2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவர் ஆவதற்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜெயராஜின் மனைவி செல்வராணி தரப்பு வழக்கறிஞர் வைத்த வாதத்தில், 'இந்த வழக்கில் முதன்மையாக குற்றம் சாட்டப்பட்டவர் ஸ்ரீதர். மொத்தம் 105 சாட்சிகளில் 54 பிரதான சாட்சிகள் விசாரிக்கப்பட்டு சாட்சியங்கள் அளித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஸ்ரீதரைத்தான் பிரதானக் குற்றவாளி எனக் கூறியுள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/28/a4504-2025-07-28-18-15-54.jpg)
காவல் நிலையத்தில் அமர்ந்து கொண்டு 'அடிக்கும் சத்தம் கேட்கவில்லை. இன்னும் பலமாக அடிக்க வேண்டும்' என ஜெயராஜை அடிக்கும் சத்தத்தை கேட்டு ஸ்ரீதர் ரசித்துள்ளார். எனவே இவரை அப்ரூவராக மாற்றக்கூடாது. ஒரு வழக்கில் சாட்சிகள் இல்லாத சூழ்நிலையில் தான் அப்ரூவராக ஏற்றுக் கொள்ள முடியும். இந்த வழக்கில் 54 சாட்சிகள் உள்ளது. எனவே இவருடைய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என மதுரை நீதிமன்றத்தில் ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தினர் தரப்பு பரபரப்பு வாதத்தை வைத்தனர்.
தொடர்ந்து இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவர் ஆவதற்கு சரியான காரணங்களை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். தாக்கல் செய்யும் மனுவை பொறுத்து அவரை அப்ரூவராக ஏற்பதா இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவெடுக்கும் என உத்தரவிட்டு வழக்கை ஜூலை 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.