hindu raksha dal members went door to door distributing swords in uttar pradesh
வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படுவதை போல், இங்கு நடக்கக்கூடாது என்று கூறி இந்து மக்களிடம் இந்து ரக்ஷா தளம் எனும் இந்து அமைப்பினர் வாள் விநியோகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் வன்முறைகளால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மர்ம நபர்களால் ஜூலை எழுச்சியின் முன்னணித் தலைவர் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்களும் வன்முறைகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அந்நாட்டில் ஏற்பட்டு வரும் வன்முறை சம்பவங்களில் ஒரு பகுதியாக, தீபுசந்திர தாஸ் என்ற இந்து இளைஞரை, கொடூரமாகத் தாக்கி கொலை செய்து நடு வீதியில் தீயிட்டு கொழுத்தினர். இதனால், அங்கு கலவரம் ஏற்பட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் சிறுபான்மையினராக இருக்கும் இந்து இளைஞரை கொடூரமாகத் தாக்கி தீயிட்டு கொழுத்திய சம்பவத்திற்கு இந்தியாவில் உள்ள பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்து இளைஞர் கொலையை கண்டித்து டெல்லியில் உள்ள வங்கதேசம் அலுவலகம் முன்பு விஸ்வ இந்து பரிஷத் என்ற இந்து அமைப்பினர் கடந்த 23ஆம் தேதி போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாரின் தடுப்புகளை உடைத்து வங்கதேச தூதரக அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றனர். இதனால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் உத்தரப் பிரதேசம் மாநிலம் காஜியாபாத் ஷாலிமார் கார்டன் பகுதியில் உள்ள இந்து மக்களிடம், இந்து ரக்ஷா தளம் என்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாகச் சென்று வாள், கோடாரி போன்ற ஆயுதத்தை விநியோகம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அமைப்பின் தேசியத் தலைவர் பூபேந்திர சவுத்ரி, ‘வங்கதேசத்தில் நமது இந்து சகோதரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்துக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வாள்களை வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஜிஹாதிற்க்கும் அவரவர் மொழியில் இந்து ரக்ஷா தளம் பதிலளிக்கும்’ என்று கூறி வாள்களை விநியோகம் செய்வதை காட்டுகிறது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, வாள்களை விநியோகம் செய்த இந்து ரக்ஷா தளம் அமைப்பைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீதமுள்ள அடையாளம் தெரியாத 30க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Follow Us