உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டின் ஜூலையில் இருந்து ஆகஸ்ட் வரையிலான கன்வார் யாத்திரையை இந்துக்கள் மேற்கொண்டு வருகிறார்கள். உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வந்து தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் நடத்துவார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட தூரம் நடந்து செல்வார்கள்.

அந்த வகையில், இந்தாண்டின் கன்வார் யாத்திரை கடந்த ஜூலை 11ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரை ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆடி மாதத்தில் நடைபெறும் இந்த யாத்திரையின் போது, யாத்திரை செல்லும் வழித்தடத்தில் திறந்தவெளி இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்றும் அனைத்து உணவகங்களிலும் உரிமையாளர்களின் பெயர்களை காட்சிப்படுத்தும் வகையில் பலகைகள் வைக்க வேண்டும் என்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளிடம் இருந்து மட்டுமல்லாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் ஆகிய கட்சிகள் கூட எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கே.எஃப்.சி உள்ளிட்ட அசைவ உணவக கடைகளை இந்து ரக்‌ஷா தள எனும் இந்து அமைப்பினர் வலுக்கட்டாயமாக மூடி போராட்டம் நடத்தி வரும் சம்பவம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. காசியாபாத்தின் வசுந்தரா பகுதியில் உள்ள ஒரு கே.எஃப்.சி கடையின் வெளியே நூற்றுக்கணக்கான இந்து ரக்‌ஷா தளம் அமைப்பினர், ‘ஜெய் ஸ்ரீ ராம், ஹர ஹர மகாதேவ்’ எனக் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், அந்த கடைக்குள் நுழைந்து சாவன் மாதத்தில் அசைவ உணவகங்களை வழங்கக் கூடாது, சைவ உணவை மட்டுமே வழங்க வேண்டும் என்று ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, அந்த கடையின் ஷட்டரை வலுக்கட்டாயமாக மூடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

பிரதான கன்வார் யாத்திரை பாதைகளில் உள்ள உணவகங்களை மட்டுமல்ல, குடியிருப்பு பகுதியில் உள்ள உணவகங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதால் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். புனித கன்வார் யாத்திரை காலமான சவான் (ஆடி) மாதத்தில் இறைச்சி விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று இந்து ரக்‌ஷா தளம் அமைப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பான அந்த அமைப்பின் தலைவரான பிங்கி சவுத்ரி கூறுகையில், ‘எங்கள் நோக்கத்தை மிக தெளிவாகக் கூறுகிறோம். கன்வார் யாத்திரையின் போது அனைத்து அசைவ உணவு விற்பனை கடைகளும், அத்தகைய உணவை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் கடையை திறக்க விரும்பினால், சைவ உணவுகளை மட்டுமே வழங்க வேண்டும்’ என்று கூறினார்.