சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் நாளான ‘ரக்ஷா பந்தன் விழா’ நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் அதி விமர்சையாக கொண்டாடப்படும் இந்த நாளின் போது பெண்கள், தங்கள் சகோதர்களுக்கு அல்லது சகோதரர்களாக நினைக்கும் ஆண்களுக்கு கையில் ராக்கி கயிறு கட்டி தங்கள் சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில் ரக்சா பந்தன் விழா, வரும் நாளை (09-08-25) கொண்டாடப்படவிருக்கிறது. இந்த நாளை கொண்டாடுவதற்காக பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்பட அனைத்து பெண்களும் தயாராகி வருகின்றனர். குறிப்பாக, பல வண்ணங்கள் மற்றும் வடிவங்களிலான ராக்கி கயிறுகளை வாங்க பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு ஒரு நாள் முன்னதாக, பெண்கள் இந்து ஆண்களுக்கு மட்டுமே ராக்கி கட்ட வேண்டும் என்று இந்து அமைப்பினர் கோரிக்கை வைத்து சாலையோரங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்து அமைப்பினர், பெண்கள் ராக்கி வாங்கும் நகர சந்தைகளில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர். மேலும் அவர்கள் இந்து பெண்களை அணுகி, ‘சனாதனி சகோதரர்களுக்கு மட்டுமே ராக்கி கட்டுவோம், மற்ற மதங்களைச் சேர்ந்த ஆண்களுக்கு ராக்கி கட்ட மாட்டோம்’ என்று உறுதிமொழி எடுக்க சொல்வதாகக் கூறப்படுகிறது. பெண்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்து, லவ் ஜிஹாத் வழக்குகள் அதிகரித்து வருவதாகவும் வாங்குபவர்களிடம் கூறுவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து இந்து அமைப்பினர் கூறுகையில், ‘சனாதனிகளின் மணிக்கட்டில் மட்டும் ராக்கி என்ற முழக்கம் சந்தைகளில் ஊக்குவிக்கப்படுகிறது. லவ் ஜிஹாத் குறித்து பெண்களிடம் எடுத்துரைக்கப்படுகிறது. இந்து ஆண்களிடம் மட்டும் ராக்கி கட்ட வேண்டும் என்ற வேண்டுகோளால் கலாச்சார மற்றும் மத அடையாளம் பாதுகாக்கப்படுகிறது. இந்து சகோதரிகளை மதித்து பாதுகாப்பவர்களுடன் மட்டும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட வேண்டும். இந்து அல்லாத ஒருவருக்கு ராக்கி கட்டுவது பெண்கள் சகோதரத்துவத்தின் பெயரில் ஏமாற்றப்படுவதற்கு ஆளாக நேரிடும்’ என்று கூறுகின்றனர்.