இந்து கோவில் மீது இஸ்லாமிய கல்லறை கட்டப்பட்டதாகக் கூறி இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் கல்லறையை சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூரின் ரெடியா பகுதியில் உள்ள அபு நகரில் நவாம் அப்துஸ் சமத் எனும் இஸ்லாமிய கல்லறை ஒன்று இருக்கிறது. அரசாங்க பதிவுகளில் மக்பரா மங்கி என அதிகாரப்பூர்வமாக கஸ்ரா எண் 753இன் கீழ் இந்த கல்லறை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத் மந்தீர் சன்ரக்ஷன் சங்கர்ஷ் சமிதி மற்றும் பா.ஜ.க உள்ளிட்ட பிற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள், இந்த கல்லறை தாக்கூர்ஜி மற்றும் சிவபெருமானுக்கு அர்பணிக்கப்பட்ட கோயில் என்றும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான கோயில் என்று சில தினங்களுக்கு தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியது
அதாவது இந்து அமைப்பின் முன்னணியில் இருந்து வரும் பா.ஜ.க மாவட்டத் தலைவர் முகலால் பால், ‘அபு நகரில் அமைந்துள்ள நவாப் அப்துஸ் சமத்தின் கல்லறை ஒரு கல்லறை அல்ல, கோயிலை மாற்றப்பட்ட இடம். இது தாக்கூர் ஜி மற்றும் சிவபெருமானின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில். கட்டமைப்பிற்குள் ஒரு தாமரை மலர் மற்றும் திரிசூலம் இருக்கிறது. எங்கள் கோயிலின் வடிவம் ஒரு மசூதியாக மாற்றப்பட்டுள்ளது. சனாதன இந்துக்கள் நாங்கள் இதை பொறுத்துக்கொள்ள மாட்டோம். தாமரை மலர்கள் மற்றும் திரிசூலங்கள் போன்ற தெளிவான அடையாளங்கள் உள்ளன. ஆகஸ்ட் 11 ஆம் தேதி, எந்த விலையிலும் கோவிலில் பிரார்த்தனை செய்வோம். காலை 9 மணிக்கு பூரி தாக்கூர் டாக் பங்களாவில் கூடி, பூஜை செய்ய சனாதனிகள் ஒன்றுகூட வேண்டும்’ என்று கூறினார். இவர் கூறியதைத் தொடர்ந்து அங்கு பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
இந்த நிலையில், ஒரு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் இன்று (11-08-25) கல்லறை வளாகத்திற்குள் புகுந்து கல்லறைக்கு வெளியே உள்ள பகுதியை சேதப்படுத்தினர். கல்லறையைச் சுற்றி பலர் காவி கொடிகளை ஏந்தி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிட்டு கல்லறையை சேதப்படுத்தினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதையடுத்து, அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு படைகள் போடப்பட்டௌள்ளது. அந்த இடத்தைச் சுற்றி தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.