Hindi names removed from railway office following struggle
திருச்சி மண்டல ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நுழைவு வாயிலுக்கு கர்தவ்ய த்வார் (Kartavya Dwar ) என இந்தியில் பெயரிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையம் அருகே அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தில் முன்புறமாக நுழைவு வாயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அந்த நுழைவு வாயிலில், ‘கர்தவ்ய த்வார்’ என்று இந்தி வார்த்தையை தமிழ் எழுத்துக்களை கொண்டும், ஆங்கில எழுத்துக்களைக் கொண்டும் எழுதப்பட்டிருந்தது. தமிழில், ‘கடமையின் நுழைவு வாயில்’ என்று பொருள்படும் கர்தவ்ய த்வார் என்ற இந்தி வார்த்தையை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மும்மொழிகளிலும் இடம்பெற்றிருந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்தி மொழியில் பெயர் சூட்டப்பட்டிருப்பது புறவாசல் வழியாக இந்தியைத் திணிக்கும் முயற்சி என தமிழகத்தைச் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனிடையே, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திருச்சி மேயர் அன்பழகன் தலைமையிலான திமுகவினர் திருச்சி ரயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கல்வெட்டில் இருந்த இந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி அழித்தனர். அதனை தொடர்ந்து உடனடியாக அனைவருக்கும் புரியும் வகையில் பெயர் வைக்க வேண்டும், இல்லையென்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவு வாயிலில் எழுதப்பட்டுள்ள அந்த வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தமிழ், ஆங்கிலம் எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ள அந்த வார்த்தைகளை ரயில்வே துறையினர் நீக்கியுள்ளனர். தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் விரைவில் பெயர் மாற்றப்படும் என ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Follow Us