Advertisment

அமைச்சர் நேருவுக்கு எதிரான வழக்கில் திடீர் திருப்பம்; மனுதாரர் மீது உயர்நீதிமன்றம் காட்டம்!

knnehruhighcourt

High Court takes action against the petition in the case against Minister K.N.Nehru

தமிழக நகராட்சி நிர்வாகத் துறையில் அதிகாரிகள் நியமனம், டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்குகளின் தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

Advertisment

மதுரையைச் சேர்ந்த ஆதி நாராயணன் மற்றும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை ஆகியோர் தாக்கல் செய்திருந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தனக்கு எதிரான வழக்குகள் குறித்து ஆதி நாராயணன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, ‘மொத்தம் 32 வழக்குகளில் 18 வழக்குகள் முடிந்து விட்டன. இதுதவிர, 2 கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி வழக்கும் உள்ளது’ என அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் குறிப்பிட்டார். இந்த வழக்கு தாக்கல் செய்த பின், தனக்கு எதிராக வழக்கு பதியப்பட்டதாக மனுதாரர் குற்றம்சாட்டினார். ஆனால் 2013 ம் ஆண்டு முதல் வழக்குகள் உள்ளன எனக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, ‘மனுதாரர் உண்மைத்தன்மை மீது சந்தேகம் எழுகிறது’ என்றார்.

Advertisment

தொடர்ந்து இன்பதுரை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, ‘ஊழல் தொடர்பாக ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும், விரிவான விசாரணை நடத்தத் தேவையில்லை’ என வாதிட்டார். அமலாக்கத் துறை தரப்பிலும், தங்கள் தரப்பில் அளிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டப்படி, அமலாக்கத்துறை சேகரித்த ஆதாரங்களை சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு அவற்றை அனுப்ப வேண்டியது கட்டாயம் என்றும், அதிகாரிகள் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே பலர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. பெருந்தொகை பெறப்பட்டுள்ளது தொடர்பாக வாட்ஸ் ஆப் குறுஞ்செய்திகளும் உள்ளன எனவும் அமலாக்க துறை தரப்பு வழக்கறிஞர் ரமேஷ் தெரிவித்தார்.

‘ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டால், ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தவில்லை என்பதை காரணமாகக் கூறி, குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கை ரத்து செய்யக் கோரலாம்; அதன் அடிப்படையில் வழக்கும் ரத்து செய்யப்படலாம்’ என தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார். தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ‘அமலாக்கத்துறை கடிதம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. விரிவான விசாரணை பதிவு செய்யப்பட்டுள்ளது. 120 நாட்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற காலவரம்பும் உள்ளது’ என்றார். ‘வங்கி மோசடி வழக்கில் தான் இந்த ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மோசடி வழக்கும், அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன. அதன் பிறகு தான் இந்த ஆதாரங்கள், தமிழக டிஜிபி-க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன’ எனவும் தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார். இந்த வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே அமலாக்க துறை கடிதத்தின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து, விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது எனவும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என யாரும் கோர முடியாது எனவும் தெரிவித்தார்.

லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ‘அதிகாரப்பூர்வமில்லாத ஆவணங்களின் அடிப்படையில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். விரிவான விசாரணை பதிவு செய்யப்பட்டு, விசாரணை துவங்கப்பட்டுள்ளது’ என்றார். மேலும், ‘லஞ்ச ஒழிப்புத்துறை விதிகளில், புகார்கள் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து வழக்குகளிலும் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த வழக்கில் துவங்கியுள்ள விசாரணை தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையிடம் ஆவணங்களை கேட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. முழுமையான, முறையான விசாரணை நடத்தப்பட்டு, உரிய அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்’ என்று லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ‘இந்த விவகாரத்தில் தனி நபர்களுக்கு எந்த பங்கும் கிடையாது. முறையாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை’ என்று தமிழக டிஜிபி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம்சவுத்ரி தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். மனுதாரர் மதுரை ஆதிநாராயணன் குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து, உண்மைத் தன்மையை நிரூபிக்கக் கூறியுள்ள நிலையில், கே.என். நேருவுக்கு எதிரான வழக்கில், அமலாக்கத்துறை, ஒரு பழக்கப்பட்ட குற்றவாளியின் உதவியைப் பயன்படுத்துகிறதா? என்ற சந்தேகம் திமுகவினர் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

chennai high court kn nehru
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe