தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று முன்தினம் (27.09.2025) கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி அருணா ஜெகதீசன் நேற்று (28.09.2025) மாலை 5 மணியளவில் தனது முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியிருந்தார். இதனையடுத்து ஏ.டி.எஸ்.பி. தலைமையிலான 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூரில் விஜய்யின் பரப்புரைக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதற்கான சதி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற அக்கட்சியின் கோரிக்கை குறித்து அவசர வழக்காக விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை மறுத்துவிட்டது. முன்னதாக இந்தத் துயர சம்பவம் குறித்து த.வெ.க. தரப்பு வழக்கறிஞர் அறிவழகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பதிவாளர் ஐயப்பனிடம் முறையிட்டார். அப்போது அவர் விஜய்யின் பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் சதித்திட்டம் உள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் ஒரே இரவில் உடற்கூறாய்வு நடத்தியதில் சந்தேகம் உள்ளது என முறையிடப்பட்டது. இது தொடர்பாகப் பொதுநல மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் அறிவழகன் தெரிவித்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிமன்ற பதிவாளர் நாளை (30.09.2025) மனுத்தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். அதோடு தசரா விடுமுறை முடிந்து வெள்ளிக்கிழமை (03.10.2025) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வழக்கறிஞர் அறிவழகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “மாநில அரசாங்கத்தின் கீழ் உள்ள தமிழகக் காவல்துறை இந்த மனுவை விசாரிக்கக் கூடாது. இதை சென்ட்ரல் பியூரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் என்ற சி.பி.ஐ. தான் விசாரிக்க வேண்டும் என்று இன்றைக்கு நாங்கள் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறோம்.
அதில் 2 விதமான உடனடியாக இடைக்கால நிவாரணம் கேட்டிருக்கிறோம். ஒன்று, அந்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை, எப்படியாவது நீக்கி விடுவார்கள். அதை உடனடியாக கைப்பற்ற வேண்டும். அதேபோன்று பாதிக்கப்பட்ட எங்கள் கட்சியினுடைய தொண்டர்கள் அவர்களுடைய குழந்தைகளை இழந்திருக்கக்கூடிய பெற்றோர்கள், அவருடைய உறவினர்களைச் சந்திப்பதற்கு விஜய்க்கு உரியப் பாதுகாப்பு தர வேண்டும் என்று 2 கோரிக்கைகளின் அடிப்படையிலும், 3 விதமான கோரிக்கைகளை வைத்து இன்றைக்கு நாங்கள் மனுவைத் தாக்கல் செய்ய இங்கே வந்தோம்” எனத் தெரிவித்தார்.