நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு புகார் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்? என அதிமுக எம்.பி.இன்பதுரை தரப்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கடிந்து கொண்டுள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நியமனங்களுக்கு லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யும்படிம் தமிழக டி.ஜி.பிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, அமலாக்கத் துறை அனுப்பிய தகவல்களில் ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு முன்பு இன்பதுரை தரப்பு வழக்கறிஞர் ஆஜரானார். அப்போது, நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை என முறையிட்டார். இதனை கேட்ட நீதிபதிகள், வழக்குப் பதியும்படி உத்தரவு பிறப்பித்து, இரண்டு, மூன்று நாட்கள் தானே ஆகிறது என்றும் அதற்குள் நாங்கள் என்ன செய்ய முடியும்?. எதற்காக அவசரப்படுகிறீர்கள்? என்ற கோணத்திலும் இன்பதுரை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இது தொடர்பாக ஏதேனும் மனுத்தாக்கல் செய்யப்பட்டால் வழக்கமான முறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/26/chennaihighcourtnew-2026-02-26-17-23-25.jpg)