தமிழகம் முழுவதும் உள்ள பொது இடங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், மதம் மற்றும் சாதி உள்ளிட்ட சமுதாய அமைப்புகளின் கொடிக்கம்பங்களைக் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதிக்குள் (28.04.2025) அகற்ற வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த ஜனவரி மாதம் உத்தரவு ஒன்றை ஏற்கனவே பிறப்பித்திருந்தது. 

Advertisment

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி இளந்திரையன் அமர்வில் இன்று (17.09.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராகி இருந்தனர். இதனையடுத்து தமிழக அரசு தரப்பில் வாதிடுகையில், “கொடிக் கம்பங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மண்டல மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்படுகிறது. அதற்கான அரசாணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. 

அதோடு கொடிக் கம்பங்கள் அமைப்பதற்கான வழிகாட்டு விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது. அதனையும் தாக்கல் செய்யப்படுகிறது. அதில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்காகக் கொடி மரங்கள் அமைக்கும் போது சாலையில் உள்ள தார மீதும், சாலை நடுவில் உள்ள சென்டர் மீடியன் பகுதியில் கொடி மரங்கள் அமைக்கக்கூடாது. 3 நாட்களுக்கு மேல் கொடி மரங்களை வைத்திருக்கக் கூடாது உள்ளிட்ட வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. 

tn-sec

Advertisment

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “கொடிக் கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணையும், வழிகாட்டு விதிமுறையும் பிறப்பித்த தமிழக அரசுக்குப் பாராட்டுகள். இந்த விதிமுறைகளையும், அரசாணையையும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். இவை ஆளும் கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். இந்த வழிகாட்டு விதிமுறைகளை அமல்படுத்தாமல் மீறிச் செயல்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் மாதம் 15ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளார்.