தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

Advertisment

இதற்கிடையில், அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு புதிய விதிகளை வகுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி , அரசியல் கட்சிகளின் ரோட் ஷோக்களுக்கு தமிழக அரசு வழிமுறைகளை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி, தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகளுக்குத் தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

அதாவது, கூட்டத்திற்கு வரும் மக்களை பொறுத்து காப்புத்தொகை அரசியல் கட்சிகள் கொடுக்க வேண்டும் என்றும், அங்கீகரிக்கப்பட்ட இடத்திற்கு கூட்டம் நடத்த வேண்டுமென்றால் 15 நாட்களுக்கு மனு அளிக்க வேண்டும் என்றும், அங்கீகரிக்கப்படாத மாற்று இடத்திற்கு 21 நாட்களுக்கு முன்னதாக மனு அளிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும், கூட்டத்தினரின் பாதுகாப்பு ஒழுங்கு முறைக்கு அமைப்பாளர்கள் பொறுப்பு ஆவார்கள் என்றும், பொது மற்றும் தனியார் சொத்திற்குச் சேதம் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்று அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்ற பல்வேறு நிபந்தனைகளை தமிழக அரசு விதித்திருந்தது. இது தொடர்பாக 10ஆம் தேதிக்குள் அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், நவம்பர் 6ஆம் தேதியில் இருந்து 20 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் கடுத்துக்களை பெற்றிருக்கிறோம். இருப்பினும், புதிய வழிமுறைகளை வகுக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ‘அரசியல் கட்சி கூட்டங்களுக்கு தேவையில்லாத நிபந்தனைகளை விதிக்க கூடாது’ என்று கூறி நவம்பர் 20ஆம் தேதிக்குள் வழிகாட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று அவகாசம் கொடுத்து உத்தரவிட்டது. 

Advertisment