சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த ஹிஜாவு நிதி நிறுவனம் மாதம் 15% வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் சுமார் 4 ஆயிரத்து 620 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம் இந்த வழக்கில் தொடர்புடைய நிர்வாக இயக்குநர் அலெக்சாண்டர் மற்றும் முகவர்கள் உட்பட 15 பேர் தலைமறைவாக உள்ளனர். எனவே இவர்களுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிர்வாக இயக்குநர் எம். சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் 9 பேர் ஜாமீன் கோரியும், அதே சமயம் தலைமறைவாக உள்ள நிர்வாகியான ராமராஜ் முன்ஜாமீன் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஜி. ஜெயசந்திரன் அமர்வில் இன்று (01.09.2025) நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் வாதிடுகையில், “சுமார் 80 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் இருந்து 4 ஆயிரத்து 620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளது.
17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இதுவரை புகார்கள் அளித்துள்ளனர். 40 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும். அதோடு சாட்சிகள் கலைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய இருவருக்கும் வழங்கிய ஜாமீனை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மோசடி செய்யப்பட்ட பணத்தில் கால் பங்கு கூட இதுவரை மீட்கவில்லை. முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் அலெக்சாண்டர் இன்னும் தலைமறைவாக உள்ளார். பொருளாதார குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தெரிவித்துள்ளது” எனத் தெரிவித்து ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் வைக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு இருதரப்பு வாதங்களையும் நீதிபதி பதிவு செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து அளித்த தீர்ப்பில், “ஜாமீன் கோரிய சௌந்தரராஜன் உள்ளிட்ட 9 பேரின் ஜாமீன் மனுவும், முன்ஜாமீன் கோரிய ராமராஜனின் முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்து உத்தரவிடப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுடைய சொத்து விவரங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தைத் திருப்பி அளிப்பது தொடர்பான எந்த ஒரு உத்தரவாதத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாததன் காரணத்தினால் தயாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது” என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.