தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இதனிடையே, தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோர் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், “முழுக்க முழுக்க காவல்துறையும் முறையான எந்தவித பாதுகாப்பும் வழங்காததே இந்த மரணத்திற்குக் காரணம்.
அதிலும் குறிப்பாகக் கூட்ட நெரிசலுக்குத் தடியடி நடத்தியும், அங்கிருந்தவர்கள் மீது ஸ்ப்ரே அடித்ததினால் ஏற்பட்ட குளறுபடி காரணமாகத்தான் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். விபத்துக்களை விபத்துக்களாகத் தான் பார்க்க முடியும். மேலும் இந்த கூட்டத்திற்கு மனுதாரர்கள் எவ்விதத்திலும் நேரடியாக அனுமதி பெறக் கேட்கவில்லை. மதியழகன் என்ற மாவட்டச் செயலாளர் மூலமாகத்தான் அனுமதி பெறப்பட்டது. எனவே இந்த வழக்கை முறையாக அவர்கள் மீது தான் தொடரப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேண்டுமென்றே இந்த வழக்கு தங்கள் மனுதாரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 41 பேர் இறந்தது தங்களுக்கு மிகப்பெரிய வருத்தம் அளித்தாலும் கூட இதனை கிரிமினல் வழக்காக தங்கள் மீது பதிவு செய்யக்கூடாது ” எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதில், “ஆனந்த் பாண்டிச்சேரியின் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதால் அவர் மீதான வழக்கைச் சிறப்பு நீதிமன்றத்தில் தான் விசாரிக்க வேண்டும். இங்கு விசாரிக்க முடியாது. அவர் நேரில் ஆஜராக வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், “இது போன்ற விடுமுறைக் காலத்தில் விசாரிக்கப்படுகின்ற நீதிமன்றங்களில் இது போன்ற நடைமுறை இருக்கிறதா? என்பது தெரியவில்லை. அது குறித்துக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்” என்று தெரிவித்தனர். மேலும் அரசு தரப்பில், “மரணத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இது போன்ற நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தை நடத்துவதற்குக் காரணமானவர்கள் அந்த இடத்திலிருந்து இந்த கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற உடனே அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டார்கள்.
அங்கிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு எல்லாம் முன்ஜாமீன் வழங்கக்கூடாது. கூட்ட நெரிசல் ஏற்பட்ட போதும் எவ்வித முறையான அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. கட்சியின் பொதுச்செயலாளர் என்று சொல்லக்கூடியவர் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அக்கட்சித் தொண்டர்களுக்குப் பாதுகாப்பு மட்டும் தான் காவல்துறை வழங்க முடியும். தொண்டர்களை ஒழுங்கு படுத்துவது, அவர்களுக்குத் தேவையான குடிநீர் வழங்குவது போன்றவற்றை எல்லாம் கூட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளர் தான் செய்ய வேண்டும். ஆனால் ஒருங்கிணைப்பாளர்கள் எதையும் செய்யவில்லை. அதிலும் குறிப்பாக உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பலர் குடிநீர் இன்றி, உடலில் ஏற்பட்ட நீர் இழப்பின் காரணமாக உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. .
கூட்ட நெரிசல் என்பது விஜய்யின் பிரச்சார வாகனத்தைச் சுற்றித் தான் அதிக அளவில் இருந்துள்ளது. பொது மக்களைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை எவ்வளவோ முயன்றிருக்கிறார்கள். ஆனால் அங்கு எதையும் ஒழுங்குபடுத்தப்படாத முடியாதபடி கூட்டமாக இருந்தது இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் விசாரித்து வருகிறது. விஜய்யின் வாகனத்தில் உள்ள 4 சிசிடிவி கேமராவின் பதிவுகளும் உடனடியாக பெற வேண்டும். விசாரணை தற்போது தொடக்க நிலையில் இருக்கிறது எனவே இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி உத்தரவுக்காக ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில் ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோரின் முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.