சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சரத்குமார், வெங்கடேஷ் மற்றும் சவுத்ரி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், “புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்காக, சோழிங்கநல்லூரில் எங்களுக்கு சொந்தமான 4 மாடி கட்டடத்தை குத்தகை அடிப்படையில் வாடகைக்கு வழங்கியிருந்தோம். அதற்கு மாதம் 10 லட்சத்து 14 ஆயிரத்து 300 ரூபாய் என வாடகை நிர்ணயம் செய்திருந்தோம்.
அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ஜனவரி முதல் 11 மாதங்களுக்கு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இருப்பினும் நாங்கள் மேற்கொண்ட ஒப்பந்தப்படி வாடகை வழங்காமல் பொதுப்பணித்துறையின் வழிகாட்டி மதிப்பீட்டின்படி மாதம் 6 லட்சத்து 8 ஆயிரத்து 438 ரூபாய் என நிர்ணயம் செய்து வாடகை வழங்கப்படுகிறது. இதன் காரணமாக குத்தகைக் காலத்தை நாங்கள் நீட்டிக்க நாங்கள் விரும்பவில்லை. அதோடு எங்களது அனுமதியின்றி பல்வேறு கட்டுமானப் பணிகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். எனவே எங்களது கட்டடத்தை காலி செய்து எங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி இன்று (11.08.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் செயல்பட்டு வரும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை 2 ஆண்டுகளில் காலி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கட்டடத்திற்கான வாடகையை ரூ. 6 லட்சத்தில் இருந்து 13 லட்சமாக உயர்த்தியும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு கூடுதல் தொகை ரூ. 2.18 கோடியை வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் (31.12.2025) மனுதாரருக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.