தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமனம் தொடர்பாக விதிகளில் திருத்தம் செய்து கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து சீனிவாசன் மாசிலாமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த அரசாணைக்குத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இத்தகைய சூழலில் தான் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்ற தேர்தலில் ஆதாயம் அடையும் நோக்கில் திமுகவின் தொழில்நுட்ப பிரிவை (ஐ.டி.) சேர்ந்தவர்களை உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகளாக நியமிக்க முயற்சிப்பதாகக் கூறி அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இன்பதுரை உயர் நீதிமன்றத்தில் மற்றொரு புதிய மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமிப்பது தொடர்பாக பொது அறிவிப்பு வெளியிடாமல் எழுத்துத் தேர்வு நடத்தாமல் பெயரளவில் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளனர். அதன் பின்னர் திமுகவின் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.
எனவே இந்த நியமனத்தை அனுமதித்தால் அரசு வேலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தகுதியான நபர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த நியமனத்திற்குத் தடை விதிக்க வேண்டும். அதோடு சீனிவாசன் மாசிலாமணி தாக்கல் செய்த மனுவில் தன்னையும் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த மனு நீதிபதி வினோத்குமார் அமர்வில் இன்று (22.09.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது சீனிவாசன் மாசிலாமணி தரப்பில் வாதிடுகையில், “தன்னுடைய மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு இன்பதுரை தரப்பில் வாதிடுகையில், “இந்த மனுவைத் திரும்பப் பெற அனுமதித்தால் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி நியமனத்தில் முறைகேடு நடக்க அதிக அளவு வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, “உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமனத்தில் ஒருவேளை முறைகேடு நடைபெற்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் என இன்பத்துரைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே அவருடைய மனுவை முடித்து வைக்கப்படுகிறது. அதே சமயம் சீனிவாசன் மாசிலாமணி மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டுள்ளார்.