காஞ்சிபுரம் மாவட்ட டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருபவர் சங்கர் கணேஷ். இவர் வன்கொடுமை தடை சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்து அவரை கைது செய்யக் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல்  உத்தரவு பிறப்பித்திருந்தார். அதே சமயம் நீதிபதி செம்மலுக்கும் அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக இருந்த லோகேஸ்வரன் என்பவருக்கும் இடையேயான தனிப்பட்ட பிரச்சனை காரணமாக டி.எஸ்.பி. சங்கர் கணேஷை கைது செய்ய உத்தரவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

Advertisment

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டி.எஸ்.பி.சங்கர் கணேஷை சிறையில் அடைக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. அதோடு மாவட்ட நீதிபதிக்கு எதிராக நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுக்க ஏதுவாக விஜிலன்ஸ் பதிவாளருடைய விசாரணை அறிக்கையைச் சென்னை உயர்நீதிமன்ற நிர்வாக குழு மற்றும் நீதிபதிகள் பணியிடமாற்ற குழுவுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

Advertisment

மற்றொருபுறம் இந்த ஒரு உத்தரவை எதிர்த்து நீதிபதி செம்மல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் உயர் நீதிமன்ற  ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்குப் பிறகு நீதிபதி செம்மலை பணியிடை நீக்கம் செய்து அதற்கான அறிவிப்பாணையை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் டி.எஸ்.பி.க்கு எதிராகக் கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நீதித்துறை மற்றும் காவல்துறையினர் மத்தியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.