திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சித்திர பால்ராஜ் என்பவர் கடந்த நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள மண்டுக கருப்பண்ணசாமி கோவிலை திறந்து பூஜைகள் செய்ய வேண்டும். அதோடு கார்த்திகை தீபத் திருநாள் அன்று கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் தாக்கல் செய்திருந்தார்.
அதன்படி இந்த மனு மீது விசாரணை நடத்திய தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “சம்பந்தப்பட்ட கோவிலை உடனடியாக திறந்து கோவிலில் வழிபாடு நடத்த வேண்டும். கார்த்திகை தீபத்தன்று கார்த்திகை விளக்கு ஏற்ற வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவு அப்பகுதி மக்கள் மற்றும் கோயில் பக்தர்களிடையே ஒருவித சர்ச்சையை கிளப்பியதாக கூறப்படுகிறது. இதன் காரணமக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்தது
இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாதது குறித்து உடனடியாக சித்திரை பால்ராஜ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வழக்கு தொடரப்பட்டது. அதன் தொடர்ச்சியக இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரும் காவல்துறை கண்காணிப்பாளரும் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்ததனர். இத்தகைய சூழலில் தான் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/19/madurai-high-court-our-2025-12-19-16-59-23.jpg)
இந்நிலையில் இந்த வழக்கு தான் நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (19.12.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதோடு இந்த வழக்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவிற்கும் இடைக்கால தடைவிதித்தனர்.
மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக இரு தரப்பினரும் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைத்துள்ளனர். அதே சமயம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் இதே இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Follow Us