தமிழ்நாட்டில் உள்ள குடியிருப்புகள், தெருக்கள் மற்றும் சாலைகளுக்குச் சாதிப் பெயர்கள் வைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் தொடர்ந்து அந்த பெயர்களே நடைமுறையில் இருந்து வரும் நிலையில் அதனை நீக்க வேண்டும் என்ற கருத்துக்கள் பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்தன. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் இது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் குடியிருப்புகள், தெருக்கள், நீர்நிலைகள் மற்றும் சாலைகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டது.
அதில், சாதிப் பெயர்களில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளுக்கு மாற்றுப் பெயர்களாக, திருவள்ளுவர், கபிலர், பாரதியார், பாரதிதாசன், தந்தை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் போன்ற தமிழ் தலைவர்களின் பெயர்களை வைக்கலாம். அதேபோன்று நீர் நிலைகளுக்கு ரோஜா, மல்லி, முல்லை போன்ற பூக்களின் பெயர்களையோ, மரங்கள், இயற்கை அமைப்புகள், வரலாற்று அடையாளங்கள் அடிப்படையிலான பெயர்களைப் பயன்படுத்தலாம் என அரசு பரிந்துரைத்தது. மேலும் நவம்பர் மாதம் 11ஆம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பரமசிவம் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் உள்ள பெயர்கள் எவ்வாறு மாற்றம் செய்யப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கவில்லை. எனவே தெருக்களின் பெயர்களை மாற்றினால் சான்றிதழ்களில் பெயர் உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “பெயர் மாற்றம் தொடர்பாகக் கள ஆய்வு மட்டுமே செய்ய வேண்டும்.
இந்த அரசாணை மீது மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது. அதோடு அரசு பிறப்பித்த அரசாணைக்குத் தடை விதிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தெருக்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்ற அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்த உத்தரவை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட கிராம சபைகளில் பெயர் மாற்றம் குறித்து முடிவெடுக்கப்பட்டு, சாதி ரீதியாக அடையாளப்படுத்தக்கூடிய பெயர்களை மாற்றி அமைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us