திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் கோபுரம் முன்பு 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த 2023ஆம் ஆண்டு அனுமதி அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், “கோயிலின் ராஜகோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டுவது கோவிலில் நடைபெறும் விழாக்களுக்கு இடையூறாக அமையும். விழாக் காலங்களில் பக்தர்கள் பங்கேற்கத் தடையாக இருக்கும் என்பதால், இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வணிக வளாகம் கட்டும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தது. இந்நிலையில் தான் இந்த வழக்கு இன்று (28.08.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வாதிடுகையில், “வணிக வளாகம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படப் போவதில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஏற்கனவே உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே கோயிலின் ராஜகோபுரம் முன்பு பக்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவது குறித்த மாற்றுத் திட்டம் சம்பந்தமாக அறிக்கையைத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “2 வாரங்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. அருணாச்சலேஸ்வரர் கோவிலை விட்டுத் தொலைவில் அரசு புறம்போக்கு நிலங்கள் இருக்கிறதா? எனக் கண்டறிந்து தெரிவித்தால் அங்கு வணிக வளாக கட்டலாம். அதேபோல கோவிலுக்கு அருகில் கோவில் நிலமாக இருந்தாலும் சரி, அரசு புறம்போக்கு நிலமாக இருந்தாலும் சரி எந்த ஒரு கட்டுமானத்தையும் அனுமதிக்க முடியாது. தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களைப் பராமரிப்பது மக்களுக்கு வசதி ஏற்படுத்துவது தொடர்பாகத் தேவஸ்தானத்தை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இதுவாகும். இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆலோசிக்க வேண்டும்” எனத் தெரிவித்து இந்த வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதிக்கு (07.09.2025) ஒத்திவைத்துள்ளனர்.
Follow Us