தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் அமர்வில் இன்று (03.10.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து பதிவு செய்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து நீதிபதி, “3 மணி முதல் 10 மணி வரை பிரச்சாரத்திற்கு அனுமதி வாங்கிவிட்டு, 12:00 மணிக்கு மக்களைக் கூடச் சொல்லி அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்தனர். இந்த வானத்தை ஓட்டிய ஓட்டுநர் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் இதுவும் செய்யவில்லை. பிரச்சார பேருந்து மோதியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாவிட்டால் மக்கள் எப்படி நம்புவார்கள். எனவே இது குறித்து Hit and Run வழக்கு ஏன் பதிவு செய்யவில்லை. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். அரசு அமைதியாக இருக்க முடியாது. கரூரில் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு (Man made disaster) நிகழ்ந்துள்ளது. நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது. நீதிமன்றம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. மொத்த உலகமே இதற்குச் சாட்சி.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தலைவர் முதல் அனைவரும் சம்பவம் இடத்தில் இருந்து மறைந்து விட்டனர். அவர்களுடைய தொண்டர்களை விட்டு விட்டார்கள். பின் தொடர்ந்தவர்களை விட்டு விட்டார்கள். இந்த நிகழ்ச்சியின் தலைவர் (விஜய்) மொத்தமாக மறந்து விட்டார். தலைமைத்துவப் பண்பே இல்லை. தலைவர்களாக இருந்தாலும் தொண்டர்களாக இருந்தாலும், இந்த நிகழ்வு நடந்த பின் ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் என அனைவரும் வருத்தம் தெரிவித்து, அனைத்து கட்சிகளும் மீட்புப் பணியில் இருந்த பொழுது, நிகழ்வை ஏற்பாடு செய்த கட்சியினர் மொத்தமாக வெளியேறி இருக்கிறார்கள். த.வெ.க.விற்கு நீதிமன்றம் கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கிறது. மக்களை, குழந்தைகளை மீட்டு இருக்க வேண்டும். அதைச் செய்யாமல் சம்பவத்துக்குப் பொறுப்பேற்காத த.வெ.க.வின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க அஸ்ரா கார்க் ஐ.ஜி. (வடக்கு மண்டலம்) தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு நியமக்கப்படுகிது. எனவே வழக்கு ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்கக் கரூர் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அனைத்து ஆவணங்களையும் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படையுங்கள்” என உத்தரவிட்டு நீதிபதி செந்தில்குமார் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆதவ் ஆர்ஜூன எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவு குறித்து நீதிபதியிடம் காட்டப்பட்டது.
அதற்கு நீதிபதி, “ஒரு சின்ன வார்த்தை பெரிய பிரச்சனை ஏற்படுத்திவிடும். இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? . நீங்கள் நீதிமன்றத்துக்கு உத்தரவுக்காகக் காத்திருக்கிறீர்களா? என அரசு தரப்புக்குக் கேள்வி எழுப்பினார். அதற்கு,“வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “ஒரு புரட்சி ஏற்படுத்துவது போலப் பதிவிட்டுள்ளார்.
இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுங்கள். இதுபோல பொறுப்பற்ற பதிவுகளை காவல்துறை கவனத்துடன் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுங்கள். இதை நீதிமன்றம் பார்த்துக் கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்டபோது போது தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.