கோப்புப்படம்
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள தொட்டகஜனுர் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை, வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் கடத்தி சென்றனர். கடந்த 2000ஆம் ஆண்டு ஜூலை 30 நாள் நடந்த இந்த சம்பவம், இரு மாநிலங்களிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவியது. பின்னர், வீரப்பன் தரப்பினருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையையடுத்து 108 நாட்களுக்குப் பிறகு ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து வீரப்பன் உட்பட அவரது கூட்டாளிகளான சந்தன கவுடா, மல்லு, சேத்துக்குளி கோவிந்தன், மாறன், கோவிந்தராஜ், அன்றில், செல்வம், அமிர்தலிங்கம், பசுவண்ணா, நாகராஜ், பொட்டுசாமி, ராமா உள்ளிட்ட 14 பேர் மீது தாளவாடி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வீரப்பன், சந்தன கவுடா, மல்லு மற்றும் சேத்துக்குளி கோவிந்தன் ஆகியோர் 2004 ஆம் ஆண்டு அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ரமேஷ் என்பவர் தலைமறைவாகிவிட்டார்.
இந்த நிலையில், மீதமுள்ளவர்கள் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. நீண்டகாலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த 2018ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளான ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி பர்வதம்மாவிடம் இது குறித்து விசாரணை நடத்தவில்லை எனவும் கடத்தப்பட்டவரை விடுவிக்கப் பிணைத் தொகை கேட்கும் ஆடியோ கேசட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் கூறி, குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரையும் விடுதலை செய்து கோபிசெட்டிபாளையம் 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, சிபிசிஐடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், இந்த மனுவினை தள்ளுபடி செய்து, ஒன்பது பேருக்கும் விடுதலையளித்து கீழமை நீதிமன்றம் வழங்கிய உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்தது.
Follow Us