சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புகழ் பெற்ற பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலங்களில் அளவீடு செய்வதில் கோயில் அறங்காவலர்கள் மோசடியில் ஈடுபட்டதாகச் சிவகங்கை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி அறங்காவலர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

Advertisment

அதன்படி இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி அமர்வில் இன்று (26.12.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது கோயில் அறங்காவலர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது. இது குறித்து ஒரு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, “பிள்ளையார்பட்டி கோவில் அறக்கட்டளையின் முன்னாள் அறங்காவலர்கள்  ஒரு கோடியே 76 லட்சம் ரூபாய் அளவிற்கு மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு தற்போது எவ்வளவு சொத்து உள்ளது?. எங்கெங்கு சொத்து உள்ளது?. 

Advertisment

எவ்வளவு நகைகள் உள்ளது? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டிய சூழல் உள்ளது. எனவே இது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்படுகிறது. இந்த ஆணையத்திடம் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் தெரிவிக்கலாம். ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம், கோயில் அறங்காவலர்களிடம் விசாரணை நடத்தலாம். இது குறித்த அறிக்கையை வரும் ஜனவரி மாதம் 30 ஆம் தேதிக்குள் ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது” என உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.