தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை (13.09.2025) திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்பதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் கடந்த 06ஆம் தேதி (06.09.2025 சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்குச் சென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையம் எதிரே உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்ற அவர் திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்வதற்குக் காவல் துறையில் அனுமதி கேட்கும் கடிதத்தைக் கோவிலில் வைத்துச் சிறப்புப் பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார். அப்போது தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் அங்குத் திரண்டனர்.
அதாவது த.வெ.க. நிர்வாகிகள் பலர் திருச்சி - புதுக்கோட்டைச் சாலையில் கார்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர். இதனால் அங்கிருந்த போலீசார் அந்த வாகனங்களை எடுக்க அறிவுறுத்தியும் அக்கட்சியினர் எடுக்காமலும், போலீசாரைப் பணி செய்ய விடாமலும் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சட்ட விரோதமாக ஒன்று கூடிப் பிரச்சனை செய்ததன் காரணமாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், திருச்சி கிழக்கு மாநகர் மாவட்ட தலைவர் குடமுழுக்கு கரிகாலன், அக்கட்சியின் நிர்வாகிகளான வெள்ளைச்சாமி, துளசி மணி, செந்தமிழ், மோசஸ் உள்ளிட்டோர் மீது சட்ட விரோதமாகக் கூடுதல், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுப்பது, அரசு ஊழியர்களின் உத்தரவைப் பின்பற்றாமல் நடப்பது உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் விமான நிலைய காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து த.வெ.க. நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். அதே சமயம் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஆனந்த், கரிகாலன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (12.09.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாகத் திருச்சி விமான நிலைய காவல் ஆய்வாளர் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதோடு ஆனந்த், கரிகாலன் மீது பதிவு செய்த வழக்குக்கு இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டார்.