திருடு போன நகை காவலர்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டால் அதற்கு அரசு இழப்பீடு தர வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருடு போன நகையைப் பல ஆண்டுகளாகப் போலீசா கண்டுபிடித்துத் தரவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மதுரை மாவட்டம் எஸ்.எஸ். காலணியைச் சேர்ந்த சுஜா சங்கரி என்பவர் மனுத் தாக்கல்செய்திருந்தார். அதில், “கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எனது வீட்டில் இருந்து சுமார் 75 சவரன் நகை மற்றும் ரூ. 1 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. சுமார் 9 ஆண்டுகள் ஆகியும் போலீசார் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (25.11.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “திருடு போன நகை காவலர்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டால் அதற்கு அரசு சார்பில் இழப்பீடு தர வேண்டும். அதாவது நகை திருட்டு வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று வழக்கை முடித்து வைத்த நாளில் இருந்து 12 வாரங்களில் இழப்பீட்டுத் தொகையைத் தர வேண்டும். திருடு போன நகையின் மதிப்பில் 30 சதவீதத்தைப் புகார்தாரருக்குத் தமிழ்நாடு அரசு இழப்பீடாக வழங்க வேண்டும்” உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Follow Us