பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி (16.06.2025) மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே இந்த போராட்டம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 வழக்குகள் தொடரப்பட்டது. அதன்படி நேற்று (12.08.2025) ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இந்த மனுவில் குறை இருப்பதாகக் கூறி அதனை மாற்றித் தாக்கல் செய்யுமாறு அறிவித்திருந்தார். அதன்படி தேன்மொழி என்பவரால் இன்று (13.08.2025) ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமாகச் செயல்பட்டு வரும் ரிப்பன் பில்டிங் முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியாகச் செல்லக்கூடிய வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே போராட்டக்காரர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். அனுமதிக்கப்படாத இடத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருவதால் பெரும் சிக்கல் ஏற்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் இன்று (13.08.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
அதற்குத் தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் வாதிடுகையில், “2 நாட்களில் இந்த பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்த வழக்கை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்குத் தலைமை நீதிபதி, “இந்த கோரிக்கையை ஏற்க முடியாது. ஏனென்றால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் தான் போராட்டம் நடத்த முடியும். எனவே அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் தூய்மைப் பணியாளர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு உத்தரவிடப்படுகிறது. அதோடு ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.