தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்த திட்டம் தொடர்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், “உங்களுடன் ஸ்டாலின் திட்ட விளம்பரத்தில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதி இன்று (01.08.2025) பிறப்பித்துள்ள உத்தரவில், “உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசுத் திட்டங்களில் முதலமைச்சரின் புகைப்படத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கட்சியின் கொள்கை தலைவர்களின் புகைப்படத்தையோ, முன்னாள் முதல் முதலமைச்சரின் புகைப்படத்தையோ பயன்படுத்துவது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. அரசுத் திட்டத்தின் பெயரில் அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்கள் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. ஆளும் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்துவது உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது ஆகும்.
எனவே தமிழக அரசு புதிதாகத் தொடங்க உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் முதல்வர் பெயரையோ, முன்னாள் முதல்வருடைய புகைப்படத்தையோ பயன்படுத்தக்கூடாது. அதே சமயம் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்குத் தடை கோரி அதிமுக அளித்த புகாரைத் தேர்தல் ஆணையம் விசாரிப்பதற்கு இந்த வழக்கு தடையாக இருக்காது” என உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.