கடலூர் மாவட்டம் பன்ருட்டி அருகே உள்ளது கருப்பூர் கிராமம். இந்த கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் பாலமுருகன் ஆலயம் அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் தான் இந்த கோவிலில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து இந்த கோவிலுக்கு குடமுழுக்கு விழா நாளை (28.08.2025) நடைபெற உள்ளது. அதே சமயம் இந்த கோவில் பொதுக்கோவில் அல்ல எனக் கூறி கோவிலுக்குள் நுழையவிடாமல் கருப்பூரில் வசிக்கும் பட்டியலின மக்களை தனி நபர்கள் தடுப்பதாகக் கூறப்படுகிறது.
இதனை எதிர்த்து அக்கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இன்று (27.08.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் இந்துமதி என்பவர் ஆஜராகி வாதிடுகையில், “கருப்பூர் கிராம மக்களுக்குச் சொந்தமான இந்த கோவில் குடமுழுக்கு விழாவில் அக்கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் கலந்துகொள்ள உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன் வாதிடுகையில், “இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லை.
இந்த கோவில் சீரமைப்பிற்கு ரூ. 2.5 லட்சம் நிதி வழங்கப்பட்டது. கருப்பூர் பாலமுருகன் கோவில் பொதுக் கோவில் தான். எனவே அனைவருக்கும் வழிபாடு செய்யும் உரிமை உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “எந்த சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அனைவருக்கும் கோவிலுக்குள் நுழைய அனுமதி இருக்க வேண்டும். அனைவரும் கடவுளிடம் தங்கள் பிரார்த்தனைகளை வைக்க அனுமதிக்கப்பட வேண்டும். குடமுழுக்கு விழாவில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம். இதற்கு எவரேனும் இடையூறு செய்தால் காவல்துறை அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். குடமுழுக்கு விழாவிற்குத் தேவையான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.