சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'கந்தன் கருணை' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் ஸ்ரீதேவி. பின்பு பல படங்களில் நடித்து கதாநாயகியாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் எனப் பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தார். 1996இல் போனி கபூரை மணந்தவருக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.
இத்தகைய சூழலில் தான் கடந்த 2018ஆம் ஆண்டு துபாயில் இருந்தபோது ஹோட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் குளிக்கச் சென்ற ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். குளியல் தொட்டியில் எதிர்பாராத விதமாக விழுந்து இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முன்னதாக நடிகை ஸ்ரீதேவி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 1998ஆம் ஆண்டு சொத்து ஒன்றை வாங்கியிருந்தார்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் சொத்தை போலி வாரிசுச் சான்றிதழ் மூலம் 3 பேர் உரிமை கொண்டாடுவதாக அவரது கணவர் போனி கபூர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (25.08.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தாம்பரம் தாசில்தார் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.