தமிழகக் காவல்துறையின் மிக உயர்ந்த பதவியான சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி (30.06.2023) முதல் சங்கர் ஜிவால் பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் தான் சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதியுடன் (31.08.2025) பணி ஓய்வு பெற்றார். இதற்கிடையே தமிழகத்தின் புதிய காவல்துறை தலைமை இயக்குநராக (பொறுப்பு) ஜி. வெங்கட்ராமன் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டார். இதனையடுத்து காவல்துறை தலைமையகத்தில் சங்கர் ஜிவால், பொறுப்பு டி.ஜி.பி.யாக பதவியேற்ற ஜி. வெங்கட்ராமனிடம் முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்தார்.
அதனைத்தொடர்ந்து பொறுப்பு டிஜிபியாக ஜி. வெங்கட்ராமன் கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். முன்னதாக சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனம் தொடர்பாக பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் சார்பில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. அதில், “ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. ஓய்வு பெறுவதற்கு முன், அடுத்த டிஜிபியாக பதவியேற்க உள்ளவரின் பெயர்கள் அடங்கிய பரிந்துரைப் பட்டியலை 3 மாதங்களுக்கு முன்னதாக யு.பி.எஸ்.சி.க்கு அனுப்ப வேண்டும்” என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு பின்பற்றவில்லை என தெரிவித்து ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளரும், வழக்கறிஞருமான வரதராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “உச்சநீதிமன்ற உத்தரவின்படி டிஜிபி பதவிக்கு தகுதி வாய்ந்த அதிகாரிகள் அடங்கிய பட்டியலை தமிழக அரசு, இதுவரை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பவில்லை. அதோடு பொறுப்பு டிஜிபி என்ற பதவியில் ஒருவரை நியமிக்க முடியாது. எனவே பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (11.09.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “டிஜிபி பதவி காலியான நிலையில் பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டிருக்கிறார். டிஜிபி பதவியில் யாராவது ஒருவர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தற்காலிகமாக பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டிருக்கிறார். அதனை எதிர்த்து பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது.
மேலும் இந்த விவகாரத்தில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இதில் தலையிட விரும்பவில்லை” எனக் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். முன்னதாக இதே விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், “தமிழகக் காவல்துறையின் டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் தமிழக அரசு அனுப்பியுள்ள பெயர் பட்டியலை யு.பி.எஸ்.சி. விரைவாகப் பரிசீலிக்க வேண்டும். இதனையடுத்து யு.பி.எஸ்.சி.யிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு அரசு உரிய முறையில் டி.ஜி.பி.யை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், டி.ஜி.பி. நியமனம் தொடர்பான பெயர் பட்டியலை இறுதி செய்து விரைந்து தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.