கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1ஆம் தேதி (01.12.2025) உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவைத் தொடர்ந்து, கார்த்திகை தீபத் திருநாளான கடந்த 04ஆம் தேதி (04.12.2025), திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் மீதுள்ள தீபத் தூணில் ஏற்றாமல் பிள்ளையார் கோயிலில் அருகில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இத்தகைய சூழலில் தான் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு மற்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 5ஆம் தேதி (05.12.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “உயர் நீதிமன்ற நீதி மாண்புக்கு எதிராக எந்த ஒரு செயலும் செய்யக்கூடாது. பொதுவெளியில் வதந்திகளைப் பரப்பும் வகையில் நீதிமன்ற உத்தரவுகள் குறித்தோ, நீதிமன்ற விவாதங்கள் குறித்தோ பரப்பக்கூடாது. தங்களுடைய நோக்கங்களைக் கருத்துக்களாகத் தெரிவிக்கக் கூடாது. அதோடு நீதிமன்ற மாண்பைக் கடைப்பிடிக்க வேண்டியது அனைத்து தரப்பினருக்கும் பொறுப்பு உள்ளது” என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை இன்றைய (12.12.2025) தினத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயசந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சிலர் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான மனுக்களைத் தாக்கல் செய்தனர். இதனை நீதிபதிகள் ஏற்கவில்லை. மேலும், “உண்மையிலேயே பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்றால் அமைதியாக இருங்கள். பொதுநல மனுக்கள் மீதான வழக்குகள் விசாரணை எடுத்த பிறகு திருப்பரங்குன்றம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். திருப்பரங்குன்றம் விவகாரம் சம்பந்தமாக வேறு சில பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் விசாரித்த பின்னர் திருப்பரங்குன்ற பிரதான வழக்கு விசாரிக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.
Follow Us