திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு, சாகித்திய அகாடமி போன்ற உயரிய இலக்கிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்குக் கனவு இல்லம் என்ற திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி இந்த திட்டத்தின் தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்தது. அதனை எதிர்த்து திலகவதி மற்றும் மறைமலை இலக்குவனார் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அப்போது இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இவர்கள் இருவருக்கும் வீடு ஒதுக்கீடு செய்யும்படி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இதே போன்ற கோரிக்கையுடன் கவிஞர் வைரமுத்து உட்பட இருவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இன்று (08.08.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “இந்த வழக்கு விசாரணை பிற்பகலுக்கு ஒத்தி வைக்க வேண்டும். அப்போது தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை பிற்பகல் 02:15 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அப்போது வைரமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், “ஏற்கனவே பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை பின் தேதியிட்டு அமல்படுத்துவதாக அரசு தலைமை வழக்கறிஞர் வந்து நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கு வீடு ஒதுக்கீடு செய்யவேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதனைக் கேட்ட நீதிபதி, “இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் செயல் ஆகும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இணையான ஒரு அரசாங்கத்தை நடத்தி வருகிறார்கள். இது துரதிருஷ்டவசமானது எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வது என்பது உணர்வுப்பூர்வமான விஷயம். இது ஐஏஎஸ் அதிகாரிகளுக்குத் தெரியாது. அவர்கள் அதிகார தொனியில் தான் செயல்படுவார்கள். அதுமட்டுமல்லாமல் கலைஞர் இருந்திருந்தால் இதை ஒருபோதும் அனுமதித்திருக்கமாட்டார். ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை இணை அரசாங்கம் நடத்த அனுமதித்தால் அது பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும்” எனத் தெரிவித்தார்.