கடந்த 2022 ஜூலை 11 அன்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச் செயலராக அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், பொதுச் செயலர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது. இதற்கு எதிராக, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை, சென்னையின் 4-வது உரிமையியல் நீதிமன்றம் கடந்த மாதம் (ஆகஸ்ட்) 1-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி. பாலாஜி, சூர்யமூர்த்தி தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இதனிடையே இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என சூரியமூர்த்தி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சூரியமூர்த்தி கட்சியின் உரிப்பினர் இல்லை. அதனால் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி நியமிக்கப்பட்டதற்கு எதிரான 2 வழக்குகள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது வழக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.