கரூரில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் நட்டா உத்தரவின் பேரில் எம்.பி ஹேமா மாலினி தலைமையில் அமைக்கப்பட்ட எட்டு பேர் குழுவினர் இன்று காலை கோவை விமான நிலையம் வந்தனர்.

Advertisment

அதனை தொடர்ந்து, எம்.பி ஹேமாமாலினி மற்றும் எம்.பி அனுராக்தாகூர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக கரூரில் நடைபெற்ற கொடுந்துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களை நாங்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதுடன் அவர்களுடன் உணர்வுபூர்வமாக உடன் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தவே இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கரூரில் சம்பவம் நடந்த இடத்தில் நேரில் கள ஆய்வு செய்து அதன் அறிக்கையை எங்கள் தலைமையகத்துக்கு சமர்ப்பிப்போம். கள ஆய்வு மேற்கொண்ட பின் மட்டுமே இந்நிகழ்வுக்கான காரணம் என்ன என்பது தெரிய வரும். நேற்று மாலை இந்த குழு அமைக்கப்பட்டது. இதில் மகாராஷ்ட்ரா, ஹிமாச்சலப் பிரதேசம், மதுரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எம்.பிக்கள் உள்ளனர். குழு அமைக்கப்பட்ட உடன் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு கோவை வந்துள்ளோம்.  கரூர் சம்பவத்திற்கு யார் காரணம், தவறு எங்கே நடந்தது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் தீவிரமாக விசாரிப்போம்” என்று கூறினர்.

Advertisment

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள், ஏற்கனவே கரூர் வந்து பார்வையிட்டுச் சென்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ஏதேனும் சந்தித்தீர்களா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அனுராக் தாக்கூர், “நாங்கள் நிதியமைச்சரை சந்திக்கவில்லை. இது 8 பேர் கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்துக் கட்சிகளின் எம்பிக்கள் குழு. நாங்கள் இங்குள்ள உள்ளூர் மக்களை (கரூர்) சந்திக்க இருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளோம். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் பெற பிரார்த்திக்கிறோம். என்ன நடந்தது, எங்கே தப்பு நடந்தது என்று அறிய விரும்புகிறோம். ஒரு முக்கியமான விஷயத்துக்காக இங்கு வந்திருக்கிறோம். பின்னர், மாவட்ட நிர்வாகத்தினர், அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்திப்போம். அன்றைய நாளில்( செப். 27) என்னதான் நிகழ்ந்தது என்று கேட்டு, அதுதொடர்பான அறிக்கையை எங்கள் கட்சி தேசிய தலைவரிடம் அளிப்போம்” என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து பாஜ தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது, “விபத்து நிகழ்ந்த இடத்தை பார்க்க உள்ளனர். அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்ப்பார்கள், பின்னர், உயிரிழந்த 41 பேரின் வீடுகளுக்கும் செல்ல இருக்கின்றனர்” என்றார்.

Advertisment

முன்னதாக, இந்த குழுவினர் இன்று காலை கோவைக்கு விமானத்தில் வந்தனர். பிறகு அவர்கள் 10 காரில் கோவையில் இருந்து கரூருக்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்தனர். ஒரு காரில் ஹேமமாலினி எம்.பி அனுராக் தாக்கூர் எம்.பி மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். இவர்களது கார் ஒன்றன்பின் ஒன்றாக சாலையில் சென்று கொண்டு இருந்தது. கோவை அருகே கே.ஜி.புதூர் சின்னியம்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது முன்னாள் சென்று கொண்டிருந்த கார் டிரைவர் திடீர் என பிரேக் பிடித்ததால் மற்ற கார்களும் அடுத்தடுத்து நிற்கத் தொடங்கின. அப்போது ஹேமமாலினி இருந்த காரின் பின்னால் ஒரு கார் லேசாக மோதியது. இதில் ஹேமமாலினி இருந்த கார் முன்னாள் நின்ற காரின் மீது மோதியது. இதனால் காரின் இரண்டு புறமும் சிறிது சேதமடைந்தது. ஆனால் காரில் இருந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அவர்கள் அனைவரும் மாற்று கார் ஏற்பாடு செய்து கரூர் புறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.