சென்னை புறநகர்ப் பகுதிகளில் திடீரென இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பொழிந்ததால் சாலைகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது.
இன்று (03/08/2025) மதியம் முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை வேளையில் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் இடியுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
தாம்பரம் பகுதியில் குறிப்பாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பொழிந்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தாம்பரம்- வேளச்சேரி சாலை, தாம்பரம்-முடிச்சூர் சாலை, ஜிஎஸ்டி சாலைகளில் தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். அதேபோல கிழக்கு தாம்பரம்-மேற்கு தாம்பரம் பகுதிகளை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வரும் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.