தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள் உட்படத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி நதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதன் காரணமாக குறுக்குத்துறை முருகன் கோவில் முழுவதுமே நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, அங்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (23.11.2025) பிற்பகல் முதல் இன்று (24.11.2025) காலை வரை தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மழை நீர் புகுந்தது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் அவதியடைந்துள்ளனர்.
மேலும் குழந்தைகள் வார்டு, குழந்தைகள் வார்டு தீவிர சிகிச்சை பகுதி, இரத்த வங்கி மற்றும் பல்வேறு வார்டுகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் சிகிச்சை பெற அங்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ராட்சத பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதே போன்று கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்திருந்தவர்கள் மழைநீர் சூழ்ந்ததால் சுமார் 200 பேர் அவதியடைந்தனர்.
அதே சமயம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதே போன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் செண்பகத்தோப்பு அருவியில் திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்கச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்திலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிகளில் குளிக்கச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பழையார், தொடுவாய், திருமுல்லைவாசல் மற்றும் பூம்புகார் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று (24.11.25) கடலுக்குச் செல்லவில்லை. அதோடு கனமழை காரணமாக நெய்வேலி என்.எல்.சி. சுரங்கங்களில் நிலக்கரி வெட்டும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது.
Follow Us